

கர்நாடகா, அலூரில் நடைபெற்ற விஜய் ஹசாரே கோப்பை உள்நாட்டு ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் ஜார்கண்ட் அணிக்காக களம் கண்ட தோனி பேட்டிங்கில் ஏமாற்றமளித்தாலும் ஜம்மு காஷ்மீர் அணியை ஜார்கண்ட் வெற்றி பெற்றது.
டாஸ் வென்ற ஜம்மு காஷ்மீர் கேப்டன் மன்ஹாஸ் முதலில் பீல்டிங்கைத் தேர்வு செய்தார், ஸ்பின்னர்கள் ஆதிக்கம் செலுத்த ஜார்கண்ட் அணி 50 ஒவர்களில் 210 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. தொடர்ந்து ஆடிய ஜம்மு காஷ்மீர் அணி ஜார்கண்டை அச்சுறுத்தினாலும் கடைசியில் 50 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்து 205 ரன்களையே எடுக்க முடிந்தது. இதனால் ஜார்கண்ட் அணி 5 ரன்களில் வெற்றி பெற்று 4 புள்ளிகள் பெற்றது.
8 ஆண்டுகளுக்குப் பிறகு தனது சொந்த மாநிலத்துக்காக ஆடிய இந்திய ஒருநாள் கேப்டன் தோனி 24 பந்துகளைச் சந்தித்து 9 ரன்களையே எடுக்க முடிந்தது. 21-வது ஓவரில் பேட் செய்ய களமிறங்கிய தோனி பிட்சின் மந்தத் தன்மை காரணமாக அதிரடியாக பேட் செய்ய முடியவில்லை என்பதோடு, ஒன்று இரண்டு ரன்களை எடுக்கவுமே திணறினார். காரணம் பர்வேஸ் ரசூல் (10 ஓவர்கள் 1/30), மற்றும் வசீம் ரஸா (10 ஓவர்கள் 3/21) ஆகியோர் கட்டுப்படுத்தினர். கடைசியில் வசீம் ரஸா என்ற இடது கை சுழற்பந்து வீச்சாளரை அடிக்கும் முயற்சியில் பர்வேஸ் ரசூலிடம் கேட்ச் கொடுத்து வெளியேறி ஏமாற்றமளித்தார்.
ஜார்கண்ட் அணிக்காக இசாங்க் ஜக்கி 54 ரன்களையும், கவுஷல் சிங் 53 ரன்களையும் எடுத்தனர். மற்ற ஜார்கண்ட் வீரர்கள் ஒருவரும் 20 ரன்களைக் கடக்கவில்லை.
ஜம்மு காஷ்மீர் சிறிய இலக்கை எதிர்கொண்டு களமிறங்கிய போது ஜார்கண்ட் இடது கை ஸ்பின்னரும் ஐபிஎல் வீரருமான ஷாபாஸ் நதீம் (3/28) கடுமையாக ஜம்மு பேட்ஸ்மென்களை சோதித்தார். டெஸ்ட் வீச்சாளரும் ஜார்கண்ட் கேப்டனுமான வருண் ஆரோனை பர்வேஸ் ரசூல் தன் பேட்டிங்கில் சரியாக ‘கவனிக்க’ அவர் 10 ஓவர்களில் விக்கெட் எடுக்க முடியாததோடு 52 ரன்கள் விட்டுக் கொடுத்தார்.
வருண் ஆரோன் கேப்டனாக இருந்தாலும், தோனிதான் களத்தில் கேப்டன்சியில் ஈடுபட்டார், கடைசியில் தனது அனுபவத்திறமையால் சிலபல பவுலிங் மாற்றங்களைக் கொண்டு வந்தார். கடைசியில் அதுவே ஜார்கண்ட் வெற்றியில் பயனளித்தது.
ஜம்மு தொடக்க வீரர் ஷுபம் காஜூரியா 106 பந்துகளில் 60 ரன்களை எடுத்தார், ஆனால் இவர் நிறைய பந்துகளை விரயம் செய்தார். பர்வேஸ் ரசூல் பேட்டிங்கில் ஆக்ரோஷம் காட்டினார். இவர் 67 பந்துகளில் 7 பவுண்டரி 1 சிக்சருடன் 63 ரன்கள் எடுத்து 36-வது ஓவரில் ஜஸ்கரன் பந்தில் பவுல்டு ஆனார்.
இவர் அவுட் ஆகும் போது ஸ்கோர் 144/3 என்று சற்று வலுவாகவே இருந்தது, ஆனால் அதன் பிறகு அதிக ரன்கள் எடுத்த கஜூரியா, மன்ஹாஸ் (3), பாந்தீப் சிங் (19) ஆமீர் சோஃபி (6) ஆகியோர் ஆட்டமிழக்க 46.2 ஓவர்களில் காஷ்மீர் அணி 184/7 என்று ஆனது. 22 பந்துகளில் 27 ரன்கள் எடுக்க முடியாதது அல்ல, ஆனாலும் வசீம் ரஸா (15), தயால் (9) ஆகியோரால் ஸ்கோரை 205 ரன்கள் வரையே கொண்டு செல்ல முடிந்தது. இதனால் 5 ரன்களில் ஜார்கண்ட் வெற்றி பெற்று 4 புள்ளிகளைப் பெற்றது.