Published : 22 Dec 2015 09:01 AM
Last Updated : 22 Dec 2015 09:01 AM

கோவா அணி உரிமையாளரை தாக்கியதாக சென்னை கேப்டன் எலோனா புளூமர் கைது: ஜாமீனில் விடுவிக்கப்பட்டவர் பிரேஸில் புறப்பட்டார்

கோவா அணி உரிமையாளரைத் தாக்கியதாக சென்னையின் எப்.சி.அணியின் கேப்டன் எலோனா புளூமரை கோவா போலீஸார் கைது செய்தனர்.

ஐஎஸ்எல் கால்பந்து தொடரின் இறுதி ஆட்டம் கோவாவின் படோர்டாவில் நேற்றுமுன்னிதம் நடைபெற்றது. இதில் சென்னையின் எப்சி. அணி 3-2 என்ற கோல் கணக்கில் கோவாவை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றது. அந்த அணிக்கு ரூ.8 கோடியும், 2-வது இடம் பிடித்த கோவா அணிக்கு ரூ.4 கோடியும் பரிசாக வழங்கப்பட்டது. அதிக கோல் அடித்த வீரருக்கான தங்க ஷுவை சென்னை அணியின் மெண்டோஸா பெற்றார். அவர் இந்த தொடரில் 13 கோல்கள் அடித்திருந்தார்.

சிறந்த கோல் கீப்பருக்கான தங்க கையுறையை சென்னையின் அபுலா எடல் கைப்பற்றினார். இதற் கிடையே போட்டி முடிவடைந்ததும் கோவா அணி வீரர்களை சென்னை அணியின் கேப்டன் எலோனா புளூமர் கேலி செய்ததாக கூறப்படு கிறது. இதை தட்டிக்கேட்ட கோவா அணியின் இணை உரிமையாளர் தத்தாராஜ் சல்கோன்கரை எலோனா புளூமர் தாக்கினார்.

இதுதொடர்பாக தத்தாராஜ் சல்கோன்கர் மார்கோவா காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதன் பேரில் எலோனா புளூமர் மீது சட்டத்திற்கு விரோதமாக தடுத்தல், சிறு காயம் ஏற்படுத்துதல், வேண்டுமென்றே அவமானப்படுத்தி அமைதியை சீர்குலைப்பது உள்ளிட்ட பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து அவரை போலீஸார் கைது செய்தனர்.

இதையடுத்து சென்னை அணி நிர்வாகத்தினர் நேற்று எலோனா புளூமரை ஜாமீனில் வெளியே எடுத்தனர். ஜாமீன் வழங்கிய நீதிபதி சில்வா, புளூமர் வெளிநாடு செல்ல அனுமதி வழங்கினார். விசாரணை முடிந்து அதிகாலை 3 மணி அளவில் தான் எலோனோ புளூமர் காவல் நிலையத்தில் இருந்து ஓட்டலுக்கு திரும்பினார். இதைத்தொடர்ந்து விமானம் மூலம் உடனடியாக எலோனா புளூமர் பிரேஸில் புறப்பட்டு சென்றார்.

இதற்கிடையே இந்த விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்த ஒழுங்கு நடவடிக்கை குழுவுக்கு பரிந்துரை செய்யப்படும் என ஐஎஸ்எல் தெரிவித்துள்ளது. இதுபோன்ற விரும்பத்தகாத செயலில் கால்பந்து அணி நிர்வாகமோ, வீரர்களோ ஈடுபடுவதை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது என ஐஎஸ்எல் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

இந்த விவகாரம் தொடர்பாக எலோனா புளூமரின் வழக்கறிஞர் ராஜீவ் கோம்ஸ் கூறும்போது, "எலோனா புளூமர் அதிகாலை 5 மணி அளவில் விமானம் மூலம் பிரேஸில் புறப்பட்டு சென்றார். புளூமர் தாக்கியதாக கூறும் தத்தாராஜ் சல்கோன்கர் மருத்துவ பரிசோதனை செய்துகொள்ள மறுக்கிறார். இதில் இருந்தே இந்த புகார் அற்பத்தனமானது என தெரிகிறது. இதுபோன்ற சம்பவம் கோவா அணியின் மீது தவறான கருத்தை ஏற்படுத்தும். மேலும் சர்வதேச கால்பந்து வீரர்கள் இங்கு வந்து விளையாட பயப்படும் சூழ்நிலை உருவாகும்" என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x