Last Updated : 04 Jun, 2021 03:13 AM

 

Published : 04 Jun 2021 03:13 AM
Last Updated : 04 Jun 2021 03:13 AM

விளையாட்டாய் சில கதைகள்: படகுப் போட்டியின் வரலாறு

உலகம் தோன்றிய காலம்தொட்டு மனிதனை மலைக்க வைத்த விஷயம் கடல். ஒரு காலகட்டத்தில் கடலோடு உலகின் எல்லை முடிந்துவிட்டதாக மனிதன் நினைத்திருந்தான். ஆனால் பின்னர் கடலுக்கு அப்பால் மற்றொரு நாடு இருப்பது தெரிந்ததும், அந்நாட்டுக்கு செல்வதற்கான வழிகளைப் பற்றி யோசிக்கத் தொடங்கினான். இதற்காக அவன் உருவாக்கிய விஷயங்களில் ஒன்று பாய்மரக் கப்பல்.

17-ம் நூற்றாண்டில், பாய்மரக் கப்பலின் மறு அவதாரமாக பாய்மரப் படகுகள் உருவாகின. இதே நூற்றாண்டில் ஹாலந்து நாட்டில் பாய்மரப் படகுகளை வைத்து போட்டிகள் நடத்தப்பட்டன. இப்போட்டி மெல்ல மெல்ல இங்கிலாந்துக்கும், அங்கிருந்து மற்ற நாடுகளுக்கும் பரவியது.

1896-ம் ஆண்டில் முதலாவது நவீன ஒலிம்பிக்கில், பாய்மரப் படகு போட்டியும் இருந்தது. ஆனால் அதற்குப் பிறகு 1900-ல் பாரிஸ் நகரில் நடந்த ஒலிம்பிக் போட்டியில் மோசமான சீதோஷணம் காரணமாக பாய்மரப் படகு போட்டி ரத்து செய்யப்பட்டது. 1904-ம் ஆண்டில் செயின்ட் லூயிஸ் நகரில் நடந்த ஒலிம்பிக் போட்டியிலும் பாய்மரப் படகுப் போட்டி இடம்பெறவில்லை. ஆனால் அதன்பிறகு நடந்த ஒலிம்பிக் போட்டிகளில், பாய்மரப் படகின் கொடி பறந்தது. பாய்மரப் படகு போட்டியைப் பொறுத்தவரை, ஒலிம்பிக்கில் நிறைய பதக்கங்கள் வென்ற நாடு என்ற பெருமை அமெரிக்காவுக்கு உண்டு. அந்நாடு பாய்மரப் படகு போட்டியில் 19 தங்கப் பதக்கங்கள் உட்பட 60 பதக்கங்களை வென்றுள்ளது.

இந்தியாவைப் பொறுத்தவரை 1972-ம் ஆண்டு மியூனிச் நகரில் நடந்த ஒலிம்பிக் போட்டியில்தான் முதல்முறையாக பாய்மரப் படகு போட்டியில் பங்கேற்றது. சோலி காண்டிராக்டர், பசித் ஆகியோர் இப்போட்டியில் பங்கேற்று 29-வது இடத்தைப் பிடித்தனர். அதன்பிறகு இந்தியா சார்பாக சிலர் ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்றாலும், பாய்மரப் படகு பிரிவில் பதக்கம் வெல்லும் இந்தியாவின் கனவு இன்னும் நனவாகவில்லை.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x