Last Updated : 03 Jun, 2021 03:12 AM

 

Published : 03 Jun 2021 03:12 AM
Last Updated : 03 Jun 2021 03:12 AM

விளையாட்டாய் சில கதைகள்: நீரிழிவு நோயை வென்ற அக்ரம்

பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் வாசிம் அக்ரமின் பிறந்தநாள் இன்று (ஜூன் 3).

பாகிஸ்தான் அணியில் வாசிம் அக்ரமை அறிமுகப்படுத்தியவர் ஜாவித் மியான்தாத். 1984-85-ல் இம்ரான்கான் சிறிது காலம் கிரிக்கெட் விளையாடாமல் இருந்துள்ளார். இந்தச் சூழலில் பாகிஸ்தான் அணியின் கேப்டனாக இருந்த ஜாவித் மியான்தாத்தான், அக்ரமை அணியில் சேர்த்துள்ளார். இந்த காலகட்டத்தில் பாகிஸ்தானுக்காக கிரிக்கெட் போட்டிகளில் ஆடினால், கிரிக்கெட் வாரியம் தனக்கு சம்பளம் கொடுக்கும் என்றுகூட அக்ரமுக்கு தெரியாது. இதனால் 1984-ல் நியூஸிலாந்துக்கு ஆடச் செல்லும்போது, எவ்வளவு பணத்தை வீட்டில் இருந்து எடுத்துவர வேண்டும் என அவரிடம் கேட்டுள்ளார் அக்ரம். அந்த அளவுக்கு உலகம் தெரியாதவராக இருந்துள்ளார்.

வாசிம் அக்ரமுக்கு 30 வயதிலேயே நீரிழிவு நோய் வந்துள்ளது. இருப்பினும் உடற்பயிற்சிகள் மற்றும் மருந்துகள் மூலம் அதைக் கட்டுக்குள் வைத்து அதன்பிறகும் 6 ஆண்டுகள் அவர் கிரிக்கெட் போட்டிகளில் ஆடியுள்ளார். பேட்ஸ்மேன்களை அதிகம் அச்சுறுத்திய பந்து வீச்சாளர்களில் ஒருவராகக் கடுதப்படும் வாசிம் அக்ரம், சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் 4 ஹாட்ரிக்குகளை (அடுத்தடுத்து 3 பந்துகளில் விக்கெட் வீழ்த்துவது) எடுத்துள்ளார். மேலும் ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் 500 விக்கெட்களை வீழ்த்திய முதல் வீரர் என்ற பெருமையும் வாசிம் அக்ரமுக்கு உண்டு.

மிகச்சிறந்த பந்துவீச்சாளராக மட்டுமின்றி, தேவைப்படும் நேரத்தில் அணிக்கு கைகொடுக்கும் பேட்ஸ்மேனாகவும் வாசிம் அக்ரம் இருந்தார். ஜிம்பாப்வேக்கு எதிரான ஒரு டெஸ்ட் போட்டியில் 8-வது பேட்ஸ்மேனாக களம் இறங்கிய வாசிம் அக்ரம், 257 ரன்களை எடுத்து கடைசிவரை அவுட் ஆகாமல் இருந்துள்ளார். இந்த ஸ்கோரில் 12 சிக்ஸர்களும், 22 பவுண்டரிகளும் அடங்கும். சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து விலகிய பிறகு ஐபிஎல் போட்டிகளில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் பந்துவீச்சு பயிற்சியாளராக சில காலம் அக்ரம் இருந்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x