

எட்டு கிரிக்கெட் அணிகள் பங்கேற்கும் சாம்பியன்ஸ் டிராபி தொடர் 2025ஆம் ஆண்டு முதல் மீண்டும் தொடங்க உள்ளது.
1998ஆம் ஆண்டில் ஐ.சி.சி. நாக்-அவுட் டிராபி என்ற பெயரில் கிரிக்கெட் தொடர் தொடங்கப்பட்டது. இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்பட்ட இத்தொடர், பின்னர் ஐசிசி சாம்பியன் டிராபி என்று அழைக்கப்பட்டது.
தரவரிசையில் முன்னிலையில் இருக்கும் அணிகள் மட்டுமே பங்கேற்கும் தொடராக இது இருந்தது. 1998, 2000, 2002, 2004, 2006, 2009, 2013, 2017 என 8 முறை தொடர்கள் நடந்து முடிந்தன. இத்தொடரை நிறுத்த 2018ஆம் ஆண்டில் முடிவு செய்து சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.) அறிவிப்பு வெளியிட்டது.
இந்நிலையில் இத்தொடரை மீண்டும் தொடங்க ஐ.சி.சி. முடிவு செய்துள்ளது. ஐ.சி.சி.யின் நிகழ்வு (Events) கூட்டத்தில் இது முடிவானது. இக்கூட்டத்தில் 2023 முதல் 2031 வரை நடைபெற உள்ள ஐ.சி.சி. தொடர்கள் பற்றி ஆலோசிக்கப்பட்டன. இதில் சாம்பியன் டிராபி தொடரை மீண்டும் 4 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடத்த முடிவானது. இதன்படி 2025 மற்றும் 2029-ல் இத்தொடர் மீண்டும் நடைபெற உள்ளது. இதில் முன்னணியில் உள்ள 8 அணிகள் மட்டுமே பங்கேற்கும்.
டி20 உலகக் கோப்பை
இந்த ஆண்டு இந்தியாவில் (அல்லது ஐக்கிய அரபு எமிரேட்ஸ்) டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் நடைபெற உள்ளது. இதனையடுத்து 2022-ல் ஆஸ்திரேலியாவில் டி20 உலகக் கோப்பை நடைபெறும். அதன் பிறகு 2024, 2026, 2028, 2030 வரை டி20 உலகக் கோப்பை தொடர் நடப்பதை ஐ.சி.சி. உறுதி செய்துள்ளது.
தற்போது டி20 உலகக் கோப்பையில் 16 அணிகள் பங்கேற்று வருகின்றன. 2024-ல் இருந்து 20 அணிகள் பங்கேற்கும் தொடராக இதை மாற்றவும் திட்டமிடப்பட்டுள்ளது. இதேபோல 2021-ம் ஆண்டைத் தொடர்ந்து 2025, 2027, 2029, 2031 ஆகிய ஆண்டுகளில் ஐ.சி.சி. டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதியாட்டத்தை நடத்தவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.