மெல்பர்னில் இன்று 2வது டெஸ்ட்: ஆஸ்திரேலிய அணியில் ஷான் மார்ஷ் நீக்கம்

மெல்பர்னில் இன்று 2வது டெஸ்ட்: ஆஸ்திரேலிய அணியில் ஷான் மார்ஷ் நீக்கம்
Updated on
1 min read

ஆஸ்திரேலியா-மேற்கிந்திய தீவுகள் இடையேயான 2வது டெஸ்ட் போட்டி பாக்ஸிங் டே நாளான இன்று மெல்பர்னில், இந்திய நேரப்படி அதிகாலை 5 மணிக்கு தொடங்கியது. இந்நிலையில் இந்த ஆட்டத்தில் விளையாடும் லெவனில் ஷான் மார்ஷ் நீக்கப்பட்டார். அவருக்கு பதிலாக உஸ்மான் ஹவாஜா சேர்க்கப்பட்டுள்ளார்.

3 டெஸ்ட் கொண்ட தொடரில் ஹோபர்ட்டில் நடைபெற்ற முதல் டெஸ்டில் ஆஸ்திரேலிய அணி இன்னிங்ஸ் மற்றும் 212 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. தொடரில் 1-0 என ஆஸ்திரேலியா முன்னிலை வகிக்கும் நிலையில் மெல்பர்னில் இன்று 2வது டெஸ்ட் தொடங்குகிறது.

இந்த போட்டிக்கான ஆஸ்திரேலிய லெவன் நேற்று அறிவிக்கப்பட்டது. இதில் ஷான் மார்ஷ் இடம் பெறவில்லை. முதல் டெஸ்டில் மார்ஷ் 182 ரன் குவித்த நிலையிலும் அவர் நீக்கப்பட்டுள்ளார். அவருக்கு பதிலாக உஸ்மான் ஹவாஜா விளையாடும் லெவனில் சேர்க்கப்பட்டுள்ளார்.

நியூஸிலாந்துக்கு எதிரான தொடரில் முதல் இரு டெஸ்டிலும் ஹவாஜா சதம் (174, 121) விளாசியிருந்தார். 3வது இடத்தில் களமிறங்கும் அவர் தொடைப்பகுதியில் ஏற்பட்ட காயத்தால் கடந்த இரு டெஸ்டிலும் பங்கேற்க முடியாமல் போனது.

கடந்த சிலதினங்களுக்கு முன்பு பிக் பாஸ் டி 20 தொடரில் 70 பந்துகளுக்கு 109 ரன் குவித்து தனது உடல் தகுதியை உஸ்மான் ஹவாஜா நிருபித்தார். இதனால் இன்று தொடங்கும் 2வது டெஸ்டில் அவருக்கு வாய்ப்பு கொடுக்கப்படுகிறது. மற்றபடி ஆஸி. அணியில் மாற்றங்கள் இல்லை. இந்த டெஸ்டிலும் பெரிய அளவிலான வெற்றியை பெற்று தொடரை கைப்பற்றும் நோக்குடன் ஆஸி. அணி களம் காண்கிறது.

மேற்கிந்திய தீவுகள் அணி முன்னணி நட்சத்திர வீரர்கள் இல்லாமல் கடுமையாக தடுமாறி வருகிறது. டேரரன் பிராவோ, பிரத்வெயிட் ஆகியோர் மட்டுமே முதல் டெஸ்டில் நம்பிக்கை அளித்தனர். சாமுவேல்ஸ், பிளாக்வுட், ரம்தின், சந்திரிகா ஆகியோர் பொறுப்புடன் ஆடினால் மட்டுமே அணிக்கு வலுசேர்க்க முடியும். அதிகாலை 5 மணிக்கு தொடங்கும் போட்டியை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நேரடி ஒளிபரப்பு செய்கிறது.

ஆஸ்திரேலிய அணி விவரம்:

டேவிட் வார்னர், ஜோ பர்ன்ஸ், உஸ்மான் ஹவாஜா, ஸ்டீவ் ஸ்மித் (கேப்டன்), ஆடம் வோஜஸ், மிட்ச்செல் மார்ஷ், பீட்டர் நெவில், பீட்டர் சிடில், ஜோஷ் ஹஸல்வுட், ஜேம்ஸ் பட்டின்சன், நாதன் லியான்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in