

ஜனவரி மாதம் ஆஸ்திரேவுக்குச் சென்று 5 ஒருநாள் போட்டிகளில் இந்தியா விளையாடுகிறது. இந்தத் தொடரில் வெல்ல முதல் 15 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை கைப்பற்றுவது அவசியம் என்று கபில் தேவ் கூறியுள்ளார்.
ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நிகழ்ச்சியில் அவர் இது பற்றி கூறும்போது, “அணியின் கேப்டன் பவுலர்களிடம் முதல் 15 ஓவர்களில் 3 விக்கெட்டுகளைக் கைப்பற்ற அறிவுறுத்துவது அவசியம். ஷமி, உமேஷ் யாதவ் அல்லது இசாந்த் சர்மாவிடம் கேப்டன் திட்டவட்டமாகத் தெரிவிக்க வேண்டும், அதாவது 15 ஓவர்களில் அவர்கள் 90 ரன்கள் எடுத்தால் கவலை வேண்டாம் ஆனால் 90 ரன்களுக்கு 3 விக்கெட்டுகள் என்று இருக்க வேண்டும். 15 ஓவர்கள் முடிவில் அவர்கள் விக்கெட் இழக்காமல் 40 ரன்கள் என்று இருப்பதை விட 90 ரன்கள் எடுத்தாலும் 3 விக்கெட்டுகளை வீழ்த்தி விடுவது அவசியம்.
ரன்களைக் கட்டுப்படுத்தும் பந்து வீச்சு உத்தியின் மூலம் ஆஸ்திரேலியாவில் நாம் போட்டிகளை ஒரு போதும் வெல்ல முடியாது. முதல் 15 ஓவர்களில் அவர்களது 3 விக்கெட்டுகளை சாய்த்து விட்டால் அந்த அணியை 280 ரன்களுக்கு மட்டுப்படுத்தலாம், இப்போதெல்லாம் 280 ரன்கள் என்ற இலக்கை துரத்துவது அவ்வளவு கடினமல்ல” என்றார்.
மாரடோனா, மெக்கன்ரோ போல ரசிகர்களை ஈர்ப்பவர் யுவராஜ்:
யுவராஜ் சிங் மீண்டும் இந்திய டி20 அணிக்கு திரும்பியுள்ளது பற்றி தெரிவித்த கபில்தேவ், “அவர் மனக்கிளர்ச்சி ஏற்படுத்தும் வீரர். ரசிகர்களை பெருமளவுக்கு ஈர்க்கக் கூடியவர். அதாவது டீகோ மாரடோனாவையோ அல்லது ஜான் மெக்கன்ரோவையோ நாம் பார்க்க ஆசைப்படுவது போல் யுவராஜ் சிங் ஆட்டத்தைப் பார்க்க ரசிகர்கள் அதிக ஆர்வம் காட்டுவர்.
பேட்டிங், பவுலிங், பீல்டிங் என்று எதுவாக இருந்தாலும் யுவராஜ் சிங் பார்வையாளர்களை மைதானத்துக்கு வருமாறு ஈர்ப்பவர். அவர் ஒரு மேட்ச் வின்னர். ஆனால் அவர் தற்போது தன்னம்பிக்கையுடன் இருப்பது அவசியம். அவர் எந்த நிலையிலும் களமிறங்கும் அனுபவமிக்கவர். என்றார் கபில்தேவ்.
விராட் கோலி குறித்து...
விராட் கோலி ஒரு பேட்ஸ்மெனாக இருந்தாலும் வேகப்பந்து வீச்சாளரின் அணுகுமுறை கொண்டவர். ஆஸ்திரேலியாவுக்கு எதிராக நாம் முகத்தில் கூட ஆக்ரோஷமாகவே தெரியவேண்டும். எதிரணியினரின் கண்களை உற்றுப்பார்க்கும் அணுகுமுறை கடந்த அணிகளுக்கு இருந்ததில்லை. இதனை ஆரம்பித்தவர் சவுவரவ் கங்குலி. அவருக்கு நல்ல அணி கிடைத்தது என்றாலும் அவர் ஆவேசமான ஒரு நபர்தான்.
அஜிங்கிய ரஹானே குறித்து..
டெல்லி டெஸ்ட் போட்டியில் அவர் 2 இன்னிங்ஸ்களிலும் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக சதம் எடுத்ததை ஒருவரும் மறக்கவியலாது. ஒரு பெரிய வீரரின் அடையாளம் என்னவெனில் எந்த ஒரு நிலைமையிலும் அவர் திறமையை வெளிப்படுத்த வேண்டும் என்பதே. அஜிங்கிய ரஹானே ஒரு முழுமையான கிரிக்கெட் வீரராக மெதுவே வளர்ந்து வருகிறார். அவர் ஆக்ரோஷமான அடித்து ஆடும் வீரர்.
இவ்வாறு கூறினார் கபில்.