Last Updated : 28 May, 2021 06:40 AM

 

Published : 28 May 2021 06:40 AM
Last Updated : 28 May 2021 06:40 AM

விளையாட்டாய் சில கதைகள்: கபில்தேவின் நீக்கமும் கொல்கத்தாவின் கொந்தளிப்பும்

இந்திய கிரிக்கெட் வரலாற்றில் ஓர் மோசமான காலகட்டம் என்று 1984-ம் ஆண்டைச் சொல்லலாம். இந்திய கிரிக்கெட்டின் இரு பெரும் ஜாம்பவான்களாக இருந்த கவாஸ்கருக்கும், கபில்தேவுக்கும் இடையே மோதல் ஏற்பட்ட காலம் அது.

1984-ம் ஆண்டில் இந்தியா – இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான தொடர் இந்தியாவில் நடைபெற்றது. இத்தொடரில் இந்திய அணியின் கேப்டனாக கவாஸ்கர் இருந்தார். தொடரின் முதல் டெஸ்ட் போட்டியில் இந்தியா வெற்றி பெற்றது. இரண்டாவது போட்டி டிராவை நோக்கி சென்று கொண்டிருந்தது. அப்போது ஆக்ரோஷமாக ஒரு ஷாட்டை அடித்த கபில்தேவ் அவுட் ஆனார். மற்றவர்களும் அடுத்தடுத்து அவுட் ஆக, இந்திய அணி தோல்வியைத் தழுவியது.

இதைத்தொடர்ந்து கொல்கத்தாவில் நடக்கவிருந்த 3-வது டெஸ்ட் போட்டியில் இருந்து கபில்தேவ் நீக்கப்பட்டார். அணியின் கேப்டனாக அப்போது இருந்த கவாஸ்கருக்கு இதில் பங்கு இருப்பதாக ரசிகர்கள் ஆவேசப்பட்டனர். மேலும் கொல்கத்தாவில் நடக்க இருந்தது கபில்தேவின் 100-வது டெஸ்ட் போட்டி என்பதால் அவருக்கு வாய்ப்பு வழங்கப்படாதது ரசிகர்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.

‘No Kapil; No Test’ (கபில்தேவ் இல்லையென்றால் டெஸ்ட் போட்டியே வேண்டாம்) என்ற பேனர்களுடன் ரசிகர்கள் கொல்கத்தா மைதானத்தில் திரண்டனர். கபில்தேவ் மீது பொறாமை கொண்டு இந்த நடவடிக்கையை கவாஸ்கர் எடுத்ததாகக் கூறி, அவர் மீது தக்காளிகளை வீசினர். இதனால் கோபம் கொண்ட கவாஸ்கர், “நான் இனி கொல்கத்தா மைதானத்தில் ஆடமாட்டேன்’’ என்று அறிவித்தார். சொன்னதைப் போலவே அதன்பின் அவர் கொல்கத்தா மைதானத்தில் ஆடவில்லை.

பிற்காலத்தில் இதுபற்றி கருத்து தெரிவித்த கவாஸ்கர், “கபில்தேவின் நீக்கத்துக்கும் எனக்கும் எந்தத் தொடர்பும் இல்லை. இந்த விஷயத்தில் நான் பலிகடா ஆக்கப்பட்டேன். இது முழுக்க முழுக்க தேர்வுக் குழுவின் முடிவு” என்று கூறியுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x