

ஆசிய குத்துச்சண்டை போட்டியில் இந்தியாவுக்கு 12 பதக்கங்கள் உறுதியாகி உள்ளன.
துபாயில் நடைபெற்று வரும்இந்தத் தொடரில் 3-வது நாளானநேற்று மகளிருக்கான 60 கிலோஎடைப் பிரிவு கால் இறுதிச் சுற்றில் இந்தியாவின் சிம்ரஞ்சித் கவுர் 4-1 என்ற கணக்கில் உஸ்பெகிஸ்தானின் ரெய்கோனா கொதிரோவாவை வீழ்த்தினார். அரை இறுதிக்கு முன்னேறியதன் மூலம் ஆசிய குத்துச்சண்டை போட்டியில் 2-வது முறையாக பதக்கம் வெல்வதை உறுதி செய்துள்ளார் சிம்ரஞ்சித். கடந்த 2019-ம் ஆண்டு நடந்த தொடரில் அவர், வெள்ளிப் பதக்கம் கைப்பற்றியிருந்தார். இன்று நடைபெறும் அரை இறுதிச் சுற்றில் கஜகஸ்தானின் ரிம்மா வோலோசென்கோவை எதிர்கொள்கிறார் கவுர்.
54 கிலோ எடைப் பிரிவு கால் இறுதிச் சுற்றில் இந்தியாவின் சாக்சி 5-0 என்ற கணக்கில் கஜகஸ்தானின் ருஹாஃப்சோ ஹகாசரோவாவையும், ஜாஸ்மின் 4-1 என்ற கணக்கில் மங்கோலியாவின் ஓயுண்ட்செட்செக் யேசுகெனையும் வீழ்த்தி அரை இறுதிச் சுற்றில் நுழைந்தனர். அரை இறுதிச் சுற்றில் சாக்சி, 2016-ம் ஆண்டு உலக சாம்பியனான கஜகஸ்தானின் தினா சாலமோனையும், ஜாஸ்மின் கஜகஸ்தானின் விளாடிஸ்லாவா குக்தாவையும் எதிர்கொள்கின்றனர்.
இவர்களுடன் ஏற்கெனவே மேரி கோம் (51 கிலோ எடை பிரிவு),லல்பூட்சைஹி (64), லோவ்லினா போர்கோஹெய்ன் (69), பூஜா ராணி (75), மோனிகா (48), சவீதி (81) மற்றும் அனுபமா ( 81 கிலோ) ஆகியோரும் அரை இறுதிக்கு முன்னேறி உள்ளனர். இதன் மூலம் மகளிர் பிரிவில் ஒவ்வொரு எடை பிரிவிலும் இந்தியாவுக்கு பதக்கம் உறுதியாகி உள்ளது.
ஆடவர் பிரிவு கால் இறுதிச் சுற்றில் நேற்று முன்தினம் இரவில்நடைபெற்ற ஆட்டத்தில் இந்தியாவின் சஞ்சித் 5-0 என்ற கணக்கில் ஜாசூர் குர்போனோவையும், 61 கிலோ எடைப் பிரிவில் ஷிவா தாபா 5-0 என்ற கணக்கில் குவைத்தின் நடேர் ஓடாவையும் வீழ்த்தி அரை இறுதியில் கால்பதித்தனர். இதன் மூலம் ஆடவர் பிரிவில் இரு பதக்கங்கள் உறுதியாகி உள்ளது.