Published : 25 May 2021 03:11 AM
Last Updated : 25 May 2021 03:11 AM

செங்கல் சூளையில் வேலை செய்யும் கால்பந்து வீராங்கனை: ரூ.1 லட்சம் நிதி, பயிற்சியாளர் வேலை வழங்குவதாக ஜார்க்கண்ட் அரசு உறுதி

செங்கல் சூளையில் சங்கீதா.

ராஞ்சி

ஜார்க்கண்டை சேர்ந்த சர்வதேச கால்பந்தாட்ட வீராங்கனை ஒருவர், அங்குள்ள செங்கல் சூளையில் கூலிக்கு வேலை பார்க்கும் பரிதாப நிலைக்கு தள்ளப்பட்டிருக்கிறார்.

ஜார்க்கண்ட் மாநிலம் தன்பாத் மாவட்டத்தைச் சேர்ந்தவர் சங்கீதா குமாரி (20). தேசிய அளவிலான கால்பந்தாட்ட போட்டிகளில் பல முறை கலந்து கொண்டிருக்கும் அவர், இரண்டு முறை சர்வதேச போட்டிகளிலும் இந்திய மகளிர் அணி சார்பில் விளையாடி நாட்டுக்கு பெருமை சேர்த்துள்ளார். எனினும், ஏழ்மை நிலை காரணமாக அடுத்தடுத்த போட்டிகளில் அவரால் பங்கேற்க முடியாத நிலை ஏற்பட்டது. மாநில அரசிடம் பல முறை உதவி கோரியும் அது பலனளிக்கவில்லை.

இதையடுத்து, தனது பெற்றோரை காப்பாற்றுவதற்காகவும், தனது இரண்டு தங்கைகளை படிக்க வைப்பதற்காகவும் சங்கீதா குமாரி, கடந்த மூன்று ஆண்டுகளுக்கும் மேலாக செங்கல் சூளையில் கூலிக்கு வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில், இதுதொடர்பான செய்தி சில தினங்களுக்கு முன்பு ஆங்கிலத் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி நாட்டு மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது.

இதன் எதிரொலியாக, இந்த விவகாரத்தில் தலையிட்ட தேசியமகளிர் ஆணையம், ஜார்க்கண்ட் அரசுக்கும், அகில இந்திய கால்பந்தாட்ட கூட்டமைப்புக்கும் நேற்றுமுன்தினம் கடிதம் எழுதியது.அதில், "சர்வதேச கால்பந்தாட்டவீராங்கனையான சங்கீதா குமாரியின் இந்த நிலைமை நமதுநாட்டுக்கு தர்மசங்கடத்தையும், அவமானத்தையும் ஏற்படுத்தியுள்ளது. அவர் தனது சொந்ததிறமையாலும், கடின உழைப்பாலும் சர்வதேச அளவில் இந்தியாவுக்கு மட்டுமல்லாமல் ஜார்க்கண்ட் மாநிலத்துக்கும் பெருமை சேர்த்திருக்கிறார். எனவே, அவருக்கு தேவையான உதவிகளை ஜார்க்கண்ட் அரசு உடனடியாக செய்ய வேண்டும்" என கூறப்பட்டுள்ளது.

இதன் தொடர்ச்சியாக, சங்கீதா குமாரிக்கு ரூ.1 லட்சம் நிதியுதவி வழங்கப்படும் என அம்மாநில முதல்வர் ஹேமந்த் சோரண் அறிவித்துள்ளார். அத்துடன் அவருக்கு தொடர்ச்சியாக வருமானம் கிடைப்பதை உறுதி செய்யும் வகையில் தன்பாத் நகரில் உள்ள கால்பந்து பயிற்சி மையத்தில் பயிற்சியாளர் வேலை வழங்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார். சங்கீதாவுக்கு தேவையான உதவி செய்யப்படும் என மத்திய விளையாட்டுத் துறை அமைச்சர் கிரண் ரிஜிஜூவும் உறுதி அளித்துள்ளார். - பிடிஐ

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x