சுவரில் ஏறி எட்டிப்பார்க்கிறார்கள், ஐபிஎல் தொடரில் பயோ-பபுள் சரியாக கடைபிடிக்கப்பட்டதா?: விருதிமான் சாஹா விமர்சனம்

சன்ரைசர்ஸ் அணி  வீரர் விருதிமான் சாஹா | கோப்புப்படம்
சன்ரைசர்ஸ் அணி வீரர் விருதிமான் சாஹா | கோப்புப்படம்
Updated on
2 min read

இந்தியாவில் நடந்த 14-வது ஐபிஎல் டி20 தொடரில் ஒவ்வொரு அணியினருக்கும் கடைபிடிக்கப்பட்ட பயோ-பபுள் முறையாக இருந்ததா என எனக்குத் தெரியவி்ல்லை என்று இந்திய அணியின் விக்கெட் கீப்பர் விருதிமான் சாஹா கேள்வி எழுப்பியுள்ளார்.

பிசிசிஐ ஏற்பாடு செய்த பயோ-பபுள் மீது முதன்முறையாக விமர்சனத்தை விருதிமான் சாஹா வைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

14-வது ஐபிஎல் டி20 தொடர் கரோனா வைரஸ் பரவலுக்கு மத்தியிலும் மிகுந்த பாதுகாப்புடன் பயோ-புள் சூழலில் நடந்தது. ஆனால், பல்வேறு கட்ட பரிசோதனை, தனிமைப்படுத்துதல் ஆகியவற்றுக்குப்பின்புதான் பயோ-பபுளுக்குள் வீரர்கள் அனுமதிக்கப்பட்டனர். இதனால் முதல் சுற்றுப் போட்டிகள் சுமுகமாகத்தான் சென்றன.

ஆனால், 2-வது சுற்று தொடங்கியவுடன் கொல்கத்தா அணியின் வீரர்கள் சந்தீப் வாரியர், சக்ரவர்த்தி, டெல்லி கேபிடல்ஸ் வீரர் அமித் மிஸ்ரா, சன்ரைசர்ஸ் அணி வீரர் விருதிமான் சாஹா, சிஎஸ்கே பயிற்சியாளர் பாலாஜி என பலர் பாதிக்கப்பட்டனர். இதனால் ஐபிஎல் தொடர் தொடர்ந்து நடத்துவது சாத்தியமில்லாத சூழல் இருப்பதையடுத்து, தொடர் தற்காலிகமாக நிறுத்தப்பட்டது.

இந்நிலையில் கரோனா தொற்றிலிருந்து உடல்நலம் தேறியுள்ள விருதிமான் சாஹா பிடிஐ செய்தி நிறுவனத்துக்குப் பேட்டி அளி்த்துள்ளார். அப்போது ஐபிஎல் பயோ-பபுள் சூழலுக்குள் எவ்வாறு கரோனா புகுந்தது என்பது குறித்து சாஹா கூறியதாவது:

ஐபிஎல் பயோ-பபுளுக்குள் எவ்வாறு கரோனா வைரஸ் புகுந்தது எனத் தெரியவி்ல்லை. இது குறித்து போட்டியை நடத்துபவர்கள்தான் ஆய்வு செய்ய வேண்டும். ஆனால் ஐக்கிய அரபுஅமீரகத்தில் கடந்த ஆண்டு டி20 தொடர் நடந்தபோது, ஒரு வீரர் கூட ஏன் மைதானத்தை பராமரிப்பவர் கூட கரோனாவில் பாதிக்கப்படவி்ல்லை.

ஆனால் இந்தியாவில் நடந்த ஐபிஎல் தொடரி்ல் பயோபபுள் முறையாகக் கடைபிடிக்கப்பட்டதா. மைதானங்களின் சுவர் அருகே சிறுவர்களும், இளைஞர்களும் எட்டிப்பார்க்கிறார்கள். இதற்கு மேல் என்னால் ஏதும் சொல்ல முடியாது.

2020ம் ஆண்டு ஐபிஎல் தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் மிகவும் அருமையாக, இடையூறின்றி நடந்தது. ஆனால், இங்கு ஐபிஎல் தொடங்கியதிலிருந்து கரோனா தொற்று அதிகரித்தவாரே இருந்தது.

பயோ-பபுளுக்குள் எவ்வாறு நாங்கள் தொற்றால் பாதிக்கப்பட்டோம் எனத் தெரியவில்லை. இப்போது நான் குணமடைந்துவிட்டேன், இயல்புக்கு திருப்புவிட்டேன். உடல்வலி, சோர்வு, மயக்கம் ஏதும் இல்லை. பயிற்சிக்குச் செல்லும்போதுதான் என் உடல் எவ்வாறு ஒத்துழைக்கும் என்பது தெரியவரும்.

முதலில் எனக்கு 2 நாட்கள் லேசான காய்ச்சல் இருந்தது, பின்னர் மணம், சுவை இழந்தேன், அதன்பின் 4 நாட்களுக்குப்பின்புதான் மீண்டும் சுவையுணர்வு திரும்ப வந்தது. இப்போது என்னுடைய குடும்பத்தாருடனும்,நண்பர்களுடன் நேரத்தை செலவிடுகிறேன், நல்ல திரைப்படங்கள் பார்க்கிறேன். மனரீதியாக நன்றாக இருக்கிறேன்

இவ்வாறு சாஹா தெரிவித்தார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in