விளையாட்டாய் சில கதைகள்: நிஜ ஹீரோவான கிரிக்கெட் ஹீரோ

விளையாட்டாய் சில கதைகள்: நிஜ ஹீரோவான கிரிக்கெட் ஹீரோ
Updated on
1 min read

நிஜ ஹீரோவான கிரிக்கெட் ஹீரோஆஸ்திரேலியாவுக்கு எதிராக கடந்த ஆண்டில் நடந்த டெஸ்ட் கிரிக்கெட் போட்டி ஒன்றில் நீண்ட நேரம் அவுட் ஆகாமல் நின்று இந்தியாவைக் காப்பாற்றியவர் அனுமா விஹாரி. இந்த கோவிட் காலத்தில் இங்கிலாந்தில் இருந்துகொண்டே அதைவிட பெரிய செயல் ஒன்றை அனுமா விஹாரி செய்துள்ளார். இந்தியாவில் கரோனாவால் பாதிக்கப்பட்டு, ஆக்சிஜன் படுக்கைகள் கிடைக்காமல் அவதிப்பட்டவர்களை, மருத்துவமனையில் சேர்த்து காப்பாற்றியதுதான் அந்த செயல்.
இந்த விஷயத்தில் விஹாரிக்கு துணையாக இருந்தது அவரது ட்விட்டர் கணக்கு. விஹாரியை அவரது ட்விட்டர் பக்கத்தில் 1 லட்சத்து 10 ஆயிரம் பேர் பின்தொடர்ந்து வருகின்றனர். இவர்களின் உதவியால்தான் கரோனாவால் பாதிக்கப்பட்ட நூற்றுக்கணக்கானவர்களை காப்பாற்றியுள்ளார் விஹாரி.

கவுண்டி கிரிக்கெட் போட்டிகளில் ஆடுவதற்காக, கடந்த ஏப்ரல் மாதம் இங்கிலாந்துக்கு சென்றுள்ளார் அனுமா விஹாரி. வரும் ஜூன் மாதம், இந்திய அணி இங்கிலாந்துக்கு செல்லும்போது, அவர்களுடன் இணைந்துகொள்வது அவரது திட்டமாக உள்ளது. இந்த சூழலில்தான் கரோனாவால் பாதிக்கப்பட்ட சிலர், தனது ட்விட்டர் பக்கத்தில் உதவி கேட்டு போட்ட சில பதிவுகளை அவர் பார்த்துள்ளார். இதைத்தொடர்ந்து தனது ட்விட்டர் நண்பர்களை ஒன்றிணைத்து ஒரு குழுவை அவர் உருவாக்கினார்.

“இந்தியாவில் மருத்துவமனையில் இடம் கிடைப்பது இத்தனை கஷ்டமான விஷயமாக இருக்கும் என்று நான் கருதவில்லை. தினந்தோறும் நூற்றுக்கணக்கான மக்கள் மருத்துவமனையில் இடம்பிடிக்க போராடுவதைப் பார்க்கும்போது பரிதாபமாக இருந்தது. அதனால்தான் எனது ட்விட்டர் நண்பர்களை ஒருங்கிணைத்து, ஒரு குழுவை உருவாக்கி அவர்களுக்கு உதவினேன். இந்த விஷயத்தில் என் மனைவி, சகோதரி மற்றும் ஆந்திர கிரிக்கெட் அணியின் நண்பர்கள் பலரும் முக்கிய பங்கு வகித்துள்ளனர். எந்தவொரு பெருமைக்காகவும் நான் இதைச் செய்யவில்லை. மக்களைக் காப்பாற்ற வேண்டும் என்ற ஒரே காரணத்துக்காகத்தான் இதைச் செய்தேன்” என்கிறார் அனுமா விஹாரி.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in