

தமிழ்நாட்டில் அதிகரித்து வரும் கரோனா பரவல் கவலையளிக்கிறது என்று சிஎஸ்கே வீரர் பிராவோ தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் கரோனா இரண்டாம் அலை உச்சத்தை அடைந்து தற்போதுதான் குறையத் தொடங்கியுள்ளது. ஆனால், தமிழ்நாட்டில் கரோனா ஏறுமுகத்தில்தான் உள்ளது.
தமிழகத்தில் இன்று 35,873 பேருக்கு கரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 18,06,861 ஆக அதிகரித்துள்ளது. சென்னையில் மட்டும் 5,559 பேர் இன்று கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர். சென்னையின் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 4,73,671 ஆக அதிகரித்துள்ளது.
இந்த நிலையில் கரோனா தொற்றிலிருந்து மக்கள் தங்களைக் காத்துக்கொள்ள சமூக இடைவெளி, முகக்கவசம் அணிதல் உள்ளிட்ட விதிமுறைகளைப் பின்பற்றுமாறு பல்வேறு பிரபலங்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
அந்த வகையில் மேற்கிந்தியத் தீவுகள் அணியின் வீரரும், சிஎஸ்கே அணி நட்சத்திர வீரருமான பிராவோ வீடியோ ஒன்றைப் பதிவிட்டுள்ளார்.
அந்த வீடியோவில், “தமிழ்நாட்டில் அதிகரித்து வரும் #covid-19 குறித்து நான் மிகவும் கவலைப்படுகிறேன். இதில் இருந்து விரைவில் மீள மாநில விதிகளைக் கண்டிப்பாகப் பின்பற்றுமாறு உங்கள் அனைவரையும் கேட்டுக்கொள்கிறேன்” என்று பிராவோ பதிவிட்டுள்ளார்.
கரோனா தொற்று காரணமாக இந்தியாவில் நடைபெற்றுக் கொண்டிருந்த ஐபிஎல் போட்டிகள் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.