Last Updated : 22 May, 2021 03:11 AM

 

Published : 22 May 2021 03:11 AM
Last Updated : 22 May 2021 03:11 AM

விளையாட்டாய் சில கதைகள்: அப்பாவுக்காக 5 ஆண்டுகள்

1962 முதல் 1978 வரை இந்திய அணிக்காக பல்வேறு கிரிக்கெட் போட்டிகளில் ஆடியுள்ள சுழற்பந்து வீச்சாளரான இரப்பள்ளி பிரசன்னாவின் பிறந்தநாள் இன்று (மே 22).

கர்நாடகாவின் பெங்களூரு நகரில் 1940-ம் ஆண்டு பிரசன்னா பிறந்தார். அவரது முழுப்பெயர் இரப்பள்ளி அனந்தராவ் நிவாஸ் பிரசன்னா. 1962-ம் ஆண்டு இங்கிலாந்துக்கு எதிராக சென்னையில் நடந்த டெஸ்ட் போட்டியில் முதல் முறையாக பிரசன்னா ஆடினார். இப்போட்டியில் நன்றாக ஆடியபோதிலும், அடுத்த 5 ஆண்டுகள் அவர் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் பங்கேற்கவில்லை. இதற்கு காரணம், தனது தந்தைக்கு பிரசன்னா கொடுத்த வாக்கு.

தனது மகன் ஒரு பொறியியல் பட்டதாரியாக வேண்டும் என்று பிரசன்னாவின் அப்பா விரும்பினார். அப்பாவின் விருப்பத்தை நிறைவேற்றுவதாக வாக்கு கொடுத்த பிரசன்னா, அடுத்த 5 ஆண்டுகள் படிப்பில் முழு கவனம் செலுத்துவதற்காக கிரிக்கெட்டில் இருந்து விலகி இருந்தார். பொறியியல் பட்டம் பெற்ற பிறகே, அவர் மீண்டும் கிரிக்கெட்டில் நுழைந்தார்.

1967-ல் மீண்டும் ஆடவந்த பிரசன்னா, மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிராக சென்னையில் நடந்த டெஸ்ட் போட்டியில், 5 விக்கெட் களைக் கைப்பற்றி ரசிகர்களைக் கவர்ந்தார். இதன்பிறகு இந்திய கிரிக்கெட்டில் முக்கிய வீரராக வலம்வரத் தொடங்கினார். இவரது காலகட்டத்தில் பேடி, சந்திரசேகர், வெங்கட்ராகவன், பிரசன்னா என்று வலுவான சுழற்பந்து வீச்சு வரிசையை இந்தியா கொண்டிருந்தது.

5 ஆண்டுகள் கிரிக்கெட் போட்டிகளில் ஆடாததால், வெறும் 49 டெஸ்ட் போட்டிகளில் மட்டுமே பங்கேற்ற பிரசன்னா, அதில் 189 விக்கெட்களைக் கைப்பற்றி உள்ளார். சர்வதேச டெஸ்ட் போட்டிகள் மட்டுமின்றி, உள்ளூர் கிரிக்கெட் போட்டிகளிலும் சிறப்பாக பங்காற்றி உள்ளார். 235 முதல்தர போட்டிகளில் அவர் 957 விக்கெட்களைக் கைப்பற்றி உள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x