

பாகிஸ்தானுக்கு எதிரான கிரிக்கெட் போட்டிகளில் இந்திய அணி விளையாடுவதில் தவறில்லை என்று முன்னாள் கிரிக்கெட் வீரர் சையத் கிர்மானி கூறியுள்ளார்.
இதுகுறித்து செய்தி நிறுவனம் ஒன்றுக்கு அளித்துள்ள பேட்டியில் அவர் கூறியிருப்பதாவது:
பாகிஸ்தானுடன் இந்திய அணி கிரிக்கெட் விளையாடுவதில் தவறில்லை. இந்திய வீரர்கள் எப்போதும் பாகிஸ்தானுக்கு எதிரான போட்டிகளில் ஆடுவதில் மகிழ்ச்சி அடைவார்கள். இதன் மூலம் இரு நாடுகளுக்கும் இடையிலான நல்லுறவு வளர வாய்ப்புள்ளது. அதே நேரத்தில் மத்திய அரசின் அனுமதியை பெறாமல் போட்டியை நடத்த இயலாது.
இந்தியா - தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான டெஸ்ட் போட்டி நடந்த நாக்பூர் மைதானம் சர்வதேச தரத்தில் இல்லை என்ற ஜெஃப் குரோவின் கருத்தை நான் மறுக்கிறேன். இங்கிலாந்தில் சமீபத்தில் நடந்த டெஸ்ட் போட்டி ஒன்றில் ஆஸ்திரேலிய அணி 60 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இப்போட்டியில் இங்கிலாந்து வீரர் ஸ்டூவர்ட் பிராட் 8 விக்கெட்களை வீழ்த்தினார். அதற்காக அந்த மைதானத்தை நாம் குறை சொல்ல முடியுமா?
இவ்வாறு கிர்மானி கூறினார்.