Published : 21 May 2021 03:10 AM
Last Updated : 21 May 2021 03:10 AM

விளையாட்டாய் சில கதைகள்: ஆயிரம் போட்டிகளில் விளையாடிய செரீனா

சமீபத்தில் நடந்த இத்தாலியன் ஓபன் டென்னிஸ் போட்டியில் ஆடியதன் மூலம், ஆயிரம் சர்வதேச டென்னிஸ் போட்டிகளில் ஆடிய வீராங்கனை என்ற சாதனையைப் படைத்துள்ளார் செரீனா வில்லியம்ஸ்.

அமெரிக்காவின் மிச்சிகன் மாகாணத்தில் 1981-ம் ஆண்டு செரீனா வில்லியம்ஸ் பிறந்தார். செரினாவின் சகோதரியான வீனஸ் வில்லியம்ஸும் புகழ்பெற்ற டென்னிஸ் வீராங்கனை ஆவார். செரீனாவுக்கு 4 வயதாக இருந்தபோது, அவர்களின் குடும்பம் கலிபோர்னியா மாகாணத்துக்கு குடிபெயர்ந்தது. செரீனாவும், அவரது அக்கா வீனஸ் வில்லியம்ஸும் அங்குதான் டென்னிஸ் பயிற்சி மேற்கொண்டனர்.

சிறுவயதில் உள்ளூர் போட்டிகள் பலவற்றில் சாம்பியன் பட்டம் வென்ற செரீனா வில்லியம்ஸ், 17-வது வயதில் தனது முதல் கிராண்ட் ஸ்லாம் பட்டமான அமெரிக்க ஓபன் பட்டத்தை வென்றார். அன்றுமுதல் டென்னிஸ் உலகில் தொடர்ந்து வெற்றிகளைக் குவித்துவரும் செரீனா வில்லியம்ஸ், 23 முறை கிராண்ட் ஸ்லாம் போட்டிகளில் ஒற்றையர் பட்டத்தை வென்றுள்ளார். அத்துடன் மேலும் பல தொடர்களிலும் பட்டம் வென்றுள்ளார்.

தான் கருவுற்றிருக்கும் நேரத்திலேயே 2017-ம் ஆண்டு நடந்த ஆஸ்திரேலியன் ஓபன் டென்னிஸ் போட்டியில், செரீனா வில்லியம்ஸ் பட்டம் வென்றார். தனக்கு மகள் பிறந்த பிறகும், டென்னிஸ் உலகில் தொடர்ந்து வெற்றிகளைக் குவித்து வருகிறார் செரீனா வில்லியம்ஸ்.

பரபரப்பான டென்னிஸ் வீராங்கனையாக இருந்தாலும், தனது மகள் ஒலிம்பியாவை எந்தக் கணத்திலும் பிரிந்திருக்க செரீனா விரும்புவதில்லை. போட்டி நடக்கும் இடங்களுக்கெல்லாம் தன் மகளையும் அழைத்துச் செல்வது அவரது வழக்கமாக இருந்துள்ளது. டோக்கியோ ஒலிம்பிக்கில் வெளிநாட்டு பார்வையாளர்கள் செல்லக்கூடாது என்று தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்தச் சூழலில், தன் மகளுக்கு டோக்கியோவில் அனுமதி மறுக்கப்பட்டால், தான் ஒலிம்பிக்கில் பங்கேற்கப் போவதில்லை என்று அறிவித்துள்ளார் செரீனா வில்லியம்ஸ்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x