Last Updated : 19 May, 2021 03:55 PM

 

Published : 19 May 2021 03:55 PM
Last Updated : 19 May 2021 03:55 PM

ஐபிஎல் தொடரில் பங்கேற்ற வீரர்களுக்கு இடமில்லை: நியூஸி.யுடனான டெஸ்ட் தொடருக்கான இங்கிலாந்து அணி அறிவிப்பு

இந்தியாவில் நடந்த ஐபிஎல் டி20 தொடரில் பங்கேற்ற வீரர்களுக்கு ஓய்வு அளிக்கப்பட்டு, நியூஸிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கான இங்கிலாந்து அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

இதில் ஜோஃப்ரா ஆர்ச்சர், பென் ஸ்டோக்ஸ் காயம் காரணமாக ஐபிஎல் தொடரில் விளையாடவில்லை என்பதால் தேர்வாளர்கள் அவர்களைப் பரிசீலிக்கவில்லை.

இங்கிலாந்து சென்றுள்ள நியூஸிலாந்து அணி 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது. முதல் டெஸ்ட் போட்டி ஜூன் 2-ம் தேதி தொடங்குகிறது.

இதில் ஐபிஎல் தொடரில் விளையாடியவர்கள், இங்கிலாந்து டெஸ்ட் அணியில் சிறப்பாக விளையாடக்கூடியவர்களான மொயின் அலி, பேர்ஸ்டோ, ஜாஸ் பட்லர், சாம்கரன், கிறிஸ் வோக்ஸ் ஆகியோர் இந்த டெஸ்ட் தொடருக்குத் தேர்வு செய்யப்படவில்லை.

ஐபிஎல் தொடர் பாதியிலேயே நிறுத்தப்பட்டதால் இந்தியாவிலிருந்து புறப்பட்டு வந்த இந்த வீரர்கள் பிரிட்டனில் 14 நாட்கள் தனிமைப்படுத்தும் காலத்தை முடிக்க வேண்டும். அதன்பின் போதுமான ஓய்வு தேவை என்பதால் இவர்கள் டெஸ்ட் தொடருக்குத் தேர்வு செய்யப்படவில்லை என்று இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது.

விக்கெட் கீப்பர் பணிக்காக ஜேம்ஸ் பிராசேவும், சசெக்ஸ் கவுண்டி அணியின் வேகப்பந்துவீச்சாளர் ஒலே ராபின்ஸனும் டெஸ்ட் தொடரில் அறிமுகமாகின்றனர். கவுண்டி போட்டிகளில் இருவரும் சிறப்பாகச் செயல்பட்டதையடுத்து இந்த வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இந்த கவுண்டி சீசனில் இதுவரை பிராசே 478 ரன்கள் குவித்துள்ளார், ராபின்ஸன் 29 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.

இருவரும் பாகிஸ்தான், மே.இ.தீவுகள் அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இங்கிலாந்து அணியில் இடம் பெற்றாலும் விளையாடவில்லை. ஆனால், இந்தத் தொடரில் முறைப்படி அறிமுகமாகின்றனர்.

சோமர்செட் அணியின் ஆல்ரவுண்டர் கிரெய்க் ஓவர்டன் 2019-ம் ஆண்டுக்குப் பின் மீண்டும் அணிக்குத் திரும்பியுள்ளார். நியூஸிலாந்துடன் 2 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி முடித்தபின் இந்திய அணி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனலுக்காக இங்கிலாந்து செல்கிறது. உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டி முடிந்தபின், இங்கிலாந்து அணியுடன் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்திய அணி விளையாடுகிறது.

இங்கிலாந்து அணி விவரம்:

ஜோ ரூட் (கேப்டன்), ஜேம்ஸ் ஆன்டர்ஸன், ஜேம்ஸ் பிராசே, ஸ்டூவர்ட் பிராட், ரோரி பர்ன்ஸ், ஜாக் கிராலே, பென் ஃபோக்ஸ், டான் லாரன்ஸ், ஜேக் லீச், கிரெக் ஓவர்டன், ஒலே போப், ஒலே ராபின்ஸன், டான் சிப்லே, ஓலே ஸ்டோன், மார்க் உட்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x