Last Updated : 19 May, 2021 03:12 AM

 

Published : 19 May 2021 03:12 AM
Last Updated : 19 May 2021 03:12 AM

விளையாட்டாய் சில கதைகள்: கங்குலியின் கலாட்டா கல்யாணம்

பெற்றோருக்குத் தெரியாமல் பதிவுத் திருமணம் செய்துகொண்டு, அதை அவர்களுக்கு தெரியாமல் பார்த்துக் கொள்ளும் ஜோடிகளை சினிமாவில்தான் பார்த்திருப்போம். ஆனால் நிஜத்திலும் அப்படி நடந்துள்ளது. நடத்திக் காட்டியவர் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரும், தற்போதைய கிரிக்கெட் வாரியத் தலைவருமான சவுரவ் கங்குலி.

கொல்கத்தாவின் பணக்கார குடும்பம் ஒன்றில் பிறந்தவர் கங்குலி. அவருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த டோனாவுக்கும் இடையே சிறு வயதிலேயே காதல் பிறந்துள்ளது. இந்த பரஸ்பர காதலுக்கு என்ன காரணம் என்று இருவருக்கும் புரிந்ததில்லை. ஆனால் அடிக்கடி ஒருவரை ஒருவர் பார்க்காமல் இருக்க முடிந்ததில்லை.

சிறுவயதில் கங்குலிக்கு பிடித்த விளையாட்டாக கால்பந்து இருந்துள்ளது. கால்பந்து மைதானத்துக்கு டோனாவின் வீடு வழியாகத்தான் செல்லவேண்டும். அப்படி செல்லும்போதெல்லாம் டோனா வீட்டில் இருக்கிறாரா என்று பார்த்துக்கொண்டே செல்வது கங்குலியின் வழக்கம். அதேபோல் பாட்மிண்டன் விளையாட நண்பர்கள் அழைத்தால், டோனாவின் வீட்டுக்கு அருகே சென்றுதான் கங்குலி ஆடுவார். அப்படி ஆடும்போது ஷட்டில்காக் டோனாவின் வீட்டில் விழுந்தால், அதை டோனாவே எடுத்துவந்து கங்குலிக்கு கொடுப்பார். அந்த நேரத்தில் இருவரும் காதலோடு பார்த்துக்கொள்வார்கள்.

இப்படி பரஸ்பரம் வளர்ந்த காதல், இந்திய அணிக்காக ஆட கங்குலி, இங்கிலாந்துக்கு சென்ற நேரத்தில் மேலும் வளர்ந்தது. இந்த தொடர் முடிந்து இந்தியா வந்ததும், முதல் வேலையாக யாருக்கும் சொல்லாமல் டோனாவை பதிவுத் திருமணம் செய்துகொண்டார். இந்த திருமணத்தை இருவரும் 6 மாதங்களுக்கு தங்கள் வீட்டில் சொல்லாமல் மறைத்து வைத்துள்ளனர். இறுதியில் இவர்களின் பதிவுத் திருமணம் பற்றிய செய்தி உள்ளூர் பத்திரிகை ஒன்றில் வெளியாக, அது வீட்டுக்கு தெரியவந்தது.

ஆரம்பத்தில் எதிர்ப்பு தெரிவித்துள்ள பெற்றோர், பிறகு சமாதானமாகி 1997-ம் ஆண்டில் திருமணம் நடத்தி வைத்துள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x