கிரிக்கெட் வாழ்க்கையில் பதற்ற உணர்வோடு போராடிய 10-12 வருடங்கள்: சச்சின் டெண்டுல்கர் பகிர்வு

கிரிக்கெட் வாழ்க்கையில் பதற்ற உணர்வோடு போராடிய 10-12 வருடங்கள்: சச்சின் டெண்டுல்கர் பகிர்வு
Updated on
1 min read

தனது 24 ஆண்டு கிரிக்கெட் வாழ்க்கையில், பெரும்பாலான சமயங்களில் தான் பதற்றமாக இருந்ததாகவும், ஆட்டத்துக்கு முன் தான் செய்யும் விஷயங்கள்தான் முக்கியம் என்று பின்னர் உணர்ந்ததாகவும் சச்சின் டெண்டுல்கர் கூரியுள்ளார்.

கோவிட் நெருக்கடி சமயத்தில் விளையாட்டு வீரர்களின் மனநலம் குறித்த உரையாடலுக்கு முக்கியத்துவம் அதிகரித்துள்ளது. அதிலும் பயோ- பபுளில் இருப்பது மன அழுத்தம் தருவதாகக் கூறிச் சில வீரர்கள் வீடு திரும்பியதும் நடந்துள்ளது.

கிரிக்கெட் ஆட்டத்தில் வீரர்களின் மனநலம் பற்றிப் பேசியிருக்கும் சச்சின் டெண்டுல்கர், "உடல் ரீதியாக ஒரு ஆட்டத்துக்குத் தயாராவதுடன் மன ரீதியாகவும் தயாராக வேண்டும் என்பதை நான் ஒரு கட்டத்தில்தான் உணர்ந்தேன். மைதானத்துக்குள் நுழையும் முன்பே என் மனதில் அந்த ஆட்டம் ஆரம்பித்துவிடும். பதற்றம் மிக அதிகமாக இருக்கும்.

10-12 வருடங்கள் அந்தப் பதற்ற உணர்வு இருந்தது. பல ஆட்டங்களுக்கு முன் இரவுகளில் நான் தூங்கியதில்லை. இதெல்லாம் என் தயாரிப்பில் ஒரு பங்கு என்பதை பின்னர் நான் ஏற்றுக்கொண்டேன். இரவில் தூங்க முடியாத நேரத்தில் மனதை அமைதிப்படுத்த வேறு எதையாவது செய்ய ஆரம்பித்தேன்.

வேறு எதையாவது என்பது மறைமுக பேட்டிங் பயிற்சி, டிவி பார்ப்பது, வீடியோ கேம்ஸ் விளையாடுவது என எதுவாகவும் இருக்கும். தேநீர் தயாரிப்பது, இஸ்திரி போடுவது எனப் பல விஷயங்கள் போட்டிக்காக என்னைத் தயார் செய்துகொள்ள உதவின. ஆட்டம் நடப்பதற்கு ஒருநாள் முன்பே எனது பைகளைத் தயார் செய்து கொள்வேன். எனது சகோதரர் எனக்கு இந்தப் பழக்கத்தைக் கற்றுத் தந்தார். இந்தியாவுக்காக நான் ஆடிய கடைசிப் போட்டியிலும்கூட இதை நான் கடைப்பிடித்தேன்.

ஒரு கிரிக்கெட் வீரரின் வாழ்க்கையில் ஏற்ற இறக்கங்கள் இருக்கத்தான் செய்யும். காயம் நேரும்போது நிபுணர்கள் உங்களுக்கு என்ன பிரச்சினை என்பதைக் கண்டறிவார்கள். அப்படித்தான் மனநலமும். உற்சாகமிழக்கும்போது நம்மைச் சுற்றி மக்கள் இருக்க வேண்டும். அந்த நிலையை ஏற்றுக்கொள்ளுதல் என்பதுதான் இதில் முக்கியமானது. அதை ஏற்றுக் கொள்ளும்போதுதான் அதற்கான தீர்வுகளைத் தேட ஆரம்பிப்பீர்கள்.

நாம் யாரிடமிருந்து வேண்டுமானாலும் கற்றுக் கொள்ளலாம். ஒரு முறை சென்னையில் நான் தங்கியிருந்த ஓட்டல் பணியாளர் ஒருவர், என் அறையில் உணவை வைத்துவிட்டு எனக்கு ஒரு யோசனை சொன்னார். எனது முழங்கை கவசம், நான் பேட்டைச் சுற்றுவதைக் கட்டுப்படுத்துகிறது என்றார். அது உண்மையும் கூட. அவரால் அந்தப் பிரச்சினை தீர்ந்தது" என்று சச்சின் கூறியுள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in