

உலகின் மிகச் சிறந்த பேட்ஸ்மேனாக இருக்கும் விராட் கோலியைத் தான் என்றுமே நினைவில் வைத்திருப்பேன் என்றும், எதிரணியை துவளச் செய்யும் அளவு அவர் போட்டிப் போட்டு ஆடக் கூடியவர் என்றும் ஆஸ்திரேலிய டெஸ்ட் அணியின் கேப்டன் டிம் பெய்ன் கூறியுள்ளார்.
2018-19-லிருந்து கோலிக்கும் - பெய்னுக்குமான கிரிக்கெட் மோதல் நடக்கிறது. களத்திலும், களத்துக்கு வெளியேயும் இரண்டு அணித் தலைவர்களும் போட்டி போட்டது கிரிக்கெட் வரலாற்றில் இடம் பிடித்தது.
அந்த ஆண்டு இந்திய அணி ஆஸ்திரேலியாவில் பெற்ற வெற்றியின் மூலம், ஆஸி. மண்ணில் டெஸ்ட் தொடரை வென்ற முதல் ஆசிய அணி என்கிற சாதனையைப் படைத்தது.
கடந்த வருடம், முதல் டெஸ்ட் போட்டிக்குப் பிறகு விராட் கோலி இல்லாத நிலையிலும் இந்திய அணி இரண்டாவது முறையாக டெஸ்ட் தொடரை வென்று சாதனை படைத்தது. அந்தத் தொடருக்கு முன், விராட் கோலி எல்லா வீரர்களையும் போன்றவர் தான் என்று பெய்ன் கூறியிருந்தார்.
தற்போது ஆஸ்திரேலிய முன்னாள் நட்சத்திர வீரர் கில்க்ரிஸ்ட் உடனான பாட்காஸ்ட் ஒன்றில் பேசியிருக்கும் பெய்ன், "விராட் கோலியைப் பற்றி நான் பல முறை பேசியிருக்கிறேன். நம் அணியில் இடம் பெற வேண்டும் என்று ஒருவர் விரும்பும் வீரர். போட்டிபோட்டுத் தீவிரமாக ஆடக்கூடியவர். தற்ப்போது உலகின் சிறந்த பேட்ஸ்மேன் அவர் தான்.
அவருக்கு எதிராக ஆடுவது சவாலானது. எதிரணியினரை துவளச் செய்யும் அளவுக்கு ஆடக் கூடியவர். நான்கு வருடங்களுக்கு முன் அவருக்கு எதிரான கிரிக்கெட் மோதலை எல்லாம் நான் என்றும் நினைவில் வைத்திருப்பேன்" என்று கூறியுள்ளார்.