

கிங்ஸ்டனில் நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக நியூசிலாந்து முதல் இன்னிங்ஸில் 508 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்தது.
வெஸ்ட் இண்டீஸ் 2ஆம் நாள் ஆட்ட முடிவில் விக்கெட் இழப்பின்றி 19 ரன்கள் எடுத்துள்ளது.
2ஆம் நாளான நேற்று 240/2 என்று துவங்கியது நியூசிலாந்து. கேன் வில்லியம்சன் 105 ரன்களுடனும், டெய்லர் 34 ரன்களுடனும் துவங்கினர்.
வில்லியம்சன் 113 ரன்கள் எடுத்து சுலைமான் பந்தில் பவுல்டு ஆனார். 55 ரன்கள் எடுத்த ராஸ் டெய்லர் ஷில்லிங்போர்ட் பந்தில் ஆட்டமிழந்து வெளியேறினார்.
கேப்டன் மெக்கல்லம் இறங்கி 7 ரன்களில் சுலைமான் பென்னிடம் வீழ்ந்தார். 279/5 என்று ஆனது நியூசீலாந்து.
அதன் பிறகுதான் வெஸ்ட் இண்டீஸுக்கு தலைவலி துவங்கியது. இந்தியாவுக்கு எதிரான தொடரில் சதம் எடுத்த ஆல்ரவுண்டர் ஜேம்ஸ் நீஷம் மற்றும் விக்கெட் கீப்பர் வாட்லிங் ஆகியோர் இணைந்தனர்.
மட்டைக்குச் சாதகமான ஆட்டக்களத்தில் இவர்கள் இருவரும் அபாரமாக ஆடினர். இதில் யாராவது ஒருவரை உடனடியாக வீழ்த்தியிருந்தால் 350 ரன்களுக்குள் நியூசீலாந்தை அடக்கியிருக்கலாம். ஆனால் விதி யாரை விட்டது.
அடுத்த 60 ஓவர்களுக்கு விக்கெட்டே விழவில்லை. ஜேம்ஸ் நீஷம் 107 ரன்களை விளாச, வாட்லிங் 89 ரன்களை எடுத்தார். இருவரும் இணைந்து 6வது விக்கெட்டுக்காக 201 ரன்களைச் சேர்க்க ஆட்டம் வெஸ்ட் இண்டீஸ் கையை விட்டுச் சென்றது.
கிறிஸ் கெய்ல் விளையாடும் 100வது டெஸ்ட் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் இனி வெல்வது கடினம். மேலும் தோற்காமல் இருந்தால் சரி என்ற நிலை ஏற்பட்டுள்ளது.
தன் முதல் 2 டெஸ்ட் போட்டிகளிலும் சதம் கண்ட 8வது வீரர் என்ற பெருமையை எட்டினார் ஜேம்ஸ் நீஷம். மொத்தம் 174.3 ஓவர்கள் வீசி நொந்து நூலானது வெஸ்ட் இண்டீஸ். கடைசியில் டிம் சவுதீ இறங்கி 7 பந்துகளில் 21 ரன்கள் எடுக்க மெக்கல்லம் டிக்ளேர் செய்து வெஸ்ட் இண்டீஸுக்கு பரிவு காட்டினார்.
அதன் பிறகு கெய்ல், போவெல் ஜோடி இறங்கி 9 ஓவர்களைத் தாக்குப் பிடித்து விக்கெட் இழக்காமல் 19 ரன்கள் எடுத்தனர்.
கெய்ல் 100வது டெஸ்ட்டில் சதம் எடுப்பாரா இன்று என்பதே இந்த டெஸ்ட் போட்டியில் எஞ்சியுள்ள ஒரே சுவாரசியம்.