

ஐபிஎல் டி 20 கிரிக்கெட் தொடரில் பங்கேற்ற ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர்கள், பயிற்சியாளர்கள், வர்ணணையாளர்கள் என 38 பேர் அடங்கிய குழுவினர் நேற்று மாலத்தீவில் இருந்து விமானம் மூலம் புறப்பட்டு தாயகம் சென்ற டைந்தனர்.
கரேனா வைரஸ் பரவல் காரணமாக ஐபிஎல் டி 20 கிரிக்கெட் தொடர் கடந்த 4ம் தேதி காலவரையின்றி நிறுத்திவைக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து இந்தத் தொடரில் பங்கேற்ற ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர்கள், பயிற்சியாளர்கள், வர்ணணையாளர்கள் என 38 பேர் தாயகம் திரும்புவதில் சிக்கல் எழுந்தது. ஏனெனில் இந்தியாவில் வைரஸ் தொற்று அதிகமாக இருப்பதால் இங்கிருந்து ஆஸ் திரேலியாவுக்குள் நுழைவதற்கு தடை விதிக்கப்பட்டிருந்தது.
இதைத் தொடர்ந்து ஆஸ்தி ரேலிய வீரர்கள் உள்ளிட்ட 38 பேரையும் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ), மாலத்தீவில் பாதுகாப்பாக தங்கவைத்திருந்தது. சுமார் இருவாரங்கள் கடந்த நிலையில் ஆஸ்திரேலிய வீரர்கள் நேற்று மாலத்தீவில் இருந்து தனி விமானம் மூலம் புறப்பட்டு தாயகம் சென்றடைந்தனர்.
இதுகுறித்து ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியத்தின் இடைக்கால தலைமை நிர்வாக அதிகாரிநிக் ஹாக்லி கூறும்போது,“வீரர்கள் தாயகம் திரும்பியது மகிழ்ச்சியாக உள்ளது. பாதுகாப்பாக அவர்களை பிசிசிஐ அனுப்பி வைத்துள்ளது. அவர்களுக்கு நாங்கள் நன்றிக்கடன் பட்டுள்ளோம். வீரர்கள்தற்போது நிம்மதியாக இருப்பார்கள்” என்றார். - பிடிஐ