

தனது 24 வருட கிரிக்கெட் வாழ்க்கையில் 10 முதல் 12 வருடங்கள் பதற்றத்துடனே இருந்ததாக இந்திய கிரிக்கெட் அணியின் ஜாம்பவானான சச்சின் டெண்டுல்கர் தெரிவித்துள்ளார்.
இணையதளம் வழியாக நடைபெற்ற கலந்துரையாடல் ஒன்றில்சச்சின் டெண்டுல்கர் மனநலம் குறித்து பேசியதாவது:
விளையாட்டுக்கு உடல் ரீதியாக தயாராகும் வேளையில் மனதளவிலும் தயார்படுத்திக் கொள்ள வேண்டும் என்பதை ஒரு குறிப்பிட்ட காலப்பகுதியில் நான் உணர்ந்தேன். போட்டி தொடங்குவதற்கு முன்னர், களத்திற்குள் வரும்போதே பதற்றம் அதிகமாக இருக்கும். 10 முதல் 12 ஆண்டுகளாக பதற்றத்தை உணர்ந்தேன்.
போட்டிக்கு முன்னதாக இரவில் தூங்காமல் இருந்துள்ளேன். பின்னர்தான் இது நான் தயாராவதற்கான ஒரு பகுதி என்பதை ஏற்கத் தொடங்கினேன். தூக்கம் இல்லாத இரவுகளில் என் மனதை சமாதானப்படுத்தினேன். மேலும் மனதை அமைதியாக வைத்திருக்க சில விஷயங்களை நான் செய்யத் தொடங்கினேன். தொலைக்காட்சி பார்ப்பது, அதிகாலையில் வீடியோ கேம்ஸ் விளையாடுவது போன்ற செயல் களில் ஈடுபட்டேன்.
தேநீர் தயாரித்தல், எனது உடைகளை அயர்னிங் செய்வது ஆகியவைகூட போட்டிக்கு என்னை தயார் செய்வதற்கு உதவியாக இருந்தது. போட்டிக்கு முன்னதாக எனது பையில் வைக்க வேண்டிய அனைத்து பொருட்களையும் நானே எடுத்து வைப்பேன். இவை அனைத்தையும் எனது சகோதரர் எனக்கு சொல்லிக்கொடுத்தார். பிறகு அதுவே எனக்கு பழக்கமானது. இவை அனைத்தையும் நான் இந்திய அணிக்காக விளையாடிய கடைசி போட்டி வரை கடைபிடித்தேன்.
காயங்கள் ஏற்படும்போது உடற்பயிற்சி நிபுணர் மற்றும் மருத்துவர்கள் உங்களை பரிசோதித்து உங்களிடம் உள்ள குறையை கண்டறிந்து கூறுவார். மன ஆரோக்கியத்திற்கும் இதே நிலைதான்.
யாரிடம் இருந்தும் நாம் கற்றுக்கொள்ள முடியும். ஒருமுறை சென்னையில் நடைபெற்ற போட்டிக்காக ஓட்டலில் தங்கியிருந்தேன். அப்போது எனது அறைக்கு தோசை கொண்டு வந்த ஒருவர், அதை மேஜையின் மீது வைத்துவிட்டு எனக்கு ஆலோசனை வழங்கினார். என்னால் சரியாக மட்டையை சுழற்ற முடியாததற்கு, நான் அணியும் எல்போ கார்டுதான் காரணம் என்ற உண்மையை கண்டறிந்து கூறி, எனது பிரச்சினைக்கு தீர்வு தேடிக்கொடுத்தார். இவ்வாறு சச்சின் கூறினார். - பிடிஐ