

இந்திய கிரிக்கெட் சரியான திசையில் சென்றுகொண்டிருக்கிறதா?
ஆமாம். அணியினர் எப்படி நடந்துகொள்கிறார்கள், எவ்வளவு கடினமாக உழைக்கிறார்கள் என்பதைப் பார்த்தாலே புரியும். சச்சின், ராகுல் திராவிட், வி.வி.எஸ். லட்சுமணன், வீரேந்திர சேவாக், சவுரவ் கங்கூலி ஆகிய மூத்த வீரர்கள் எங்களுக்கான முன்னுதாரணங் களை உருவாக்கியிருக்கிறார்கள். இவர்களுடைய இடங்களை எப்படி நிரப்பப்போகிறோம் என்று எப்போதும் நான் மலைப்பதுண்டு.
அவர்களுக்கு முன்னால் நாங்கள் ஒன்றுமே இல்லை. அவர்கள் கனவுகளை நனவாக்கும் முயற்சியில் நாங்கள் ஈடுபட்டிருக்கிறோம். எங்களுக்குப் பொறுப்பு இருக்கிறது. நாங்கள் பக்குவத்துடன் யோசிக்க ஆரம்பித்திருக்கிறோம். இந்திய கிரிக்கெட்டை முன்னெடுத்துச் செல்ல வேண்டும் என்னும் முனைப்புடன் ஒருமித்து சிந்திக்கிறோம். தொடர்ந்து முயற்சி செய்கிறோம். இவையெல்லாம் சேர்ந்து, நாங்கள் சரியான பாதையில் சென்றுகொண் டிருக்கிறோம் என்னும் நம்பிக் கையை எனக்கு அளிக்கின்றன.
அணியை வழிநடத்திச் செல்வது மிகவும் கடினமான வேலை என்று பட்டோடி ஒருமுறை சொன்னார். உங்கள் கருத்து என்ன?
முழுக்க முழுக்க சரி. வெற்றிபெறும்போது எல்லாமே நன்றாக இருக்கும். அணி சரியாக ஆடாதபோதுதான் பிரச்சினை. வளர வளர நாம் கற்றுக்கொள்கிறோம். கவலைப்பட்டுக் கொண்டிருப்ப தால் எந்தப் பலனும் இல்லை. தலைமை என்பது மிகவும் கடினமான பணிதான். இதைப் பல ஆண்டுகளாக மகேந்திர சிங் தோனி செய்து வருகிறார். அவர் ஒருபோதும் நிதானத்தை இழப்பதில்லை.
அவரால் எப்படி இது முடிகிறது என்று எனக்குத் தெரியவில்லை. அணித் தலைவர் மொத்த அணியின் சுமையையும் சுமக்க வேண்டியிருக்கும். இந்தியர்கள் கிரிக்கெட்டை மிகவும் நேசிப்பவர்கள். எனவே இது ஒரு நாட்டின் எதிர்பார்ப்புகளைச் சுமப்பதற்குச் சமம். தோனி, வெவ்வேறு விதமான சவால்களுக்கேற்பத் தன்னைத் தயார்ப்படுத்திக் கொள்வதைப் பார்த்திருக்கிறேன். அணி மோசமாக ஆடும்போது பத்திரிகையாளர் சந்திப்பில் கலந்து கொள்வதுகூடக் கடினமானது. அவரை நினைத்து வருந்தியிருக்கிறேன்.
கேப்டனாக இருப்பதால் அணியின் தோல்விக்கு உங்கள் மீதே பழிபோட்டுக்கொள்வீர்களா?
அதற்கு முன்பும் சாரிடம் (கோலியின் கோச் ராஜ்குமார் ஷர்மா) என்னால்தான் அணி தோற்றுவிட்டது என்று புலம்புவேன். இங்கிலாந்தில் நடந்த 20 ஓவர் போட்டியில் நான் 70 ரன் எடுத்தேன். அப்போது ஒரு புல் ஷாட் அடித்து அவுட் ஆனேன். அந்தப் போட்டியில் தோற்றுப்போனோம். அதை நினைத்து நான் பல முறை வருந்தியிருக்கிறேன்.
களத்தில் உங்களுக்கு நீங்களே சவால்களை நிர்ணயித்துக்கொள்வதுண்டா?
ஆம். என்னைப் பற்றிப் பிறர் என்ன சொல்கிறார்கள் என்பதைப் பற்றி அதிகம் யோசிப்பதைவிட என் ஆட்டம் பற்றி நானே அலசி ஆராய்ந்து ஒரு முடிவுக்கு வருவேன். அதனால்தான் ஒவ்வொரு முறை ஆட்டமிழக்கும்போதும் நான் மிகவும் வருத்தப்படுகிறேன். எனக்கென்று சில அளவுகோல்களை நிர்ணயித்துக்கொண்டு தன்னம்பிக்கையோடு ஆடிவருகிறேன்.
மட்டையாளர் என்ற முறையில் வளர்ச்சி அடைந்திருப்பதாகக் கருதுகிறீர்களா?
ஒருநாள் போட்டிகளில் நிச்சயமாக நான் மேம்பட்டிருக்கிறேன். டெஸ்ட் போட்டிகளில் நான் இன்னும் அந்த நிலையை அடையவில்லை என்றுதான் சொல்ல வேண்டும். சூழ்நிலைக்கு ஏற்றவாறு ஆட வேண்டும் என்று விரும்புகிறேன். ஒருநாள் போட்டியில் இதை என்னால் செய்ய முடிகிறது. டெஸ்ட் போட்டியில் நான் முன்னேறியிருக்கிறேன். ஆனால் சூழ்நிலைக்குத் தகுந்தவாறு ஆடக்கூடிய திறமையைப் பொறுத்தவரை இன்னும் முன்னேற வேண்டும்.
இன்னொருவர் ஆடிய ஷாட் எதையாவது ஆட வேண்டும் என்று கனவு கண்டிருக்கிறீர்களா?
கண்டிப்பாக. 1998-ல் ஷார்ஜாவில் சச்சின் டெண்டுல்கர் அடித்த ஷாட். மைக்கேல் காஸ்பரோவிச்சின் பந்தை அவர் நேராக அடித்தார். பந்து ஆட்டக்காரர்களின் ஓய்வு அறைக்கு முன்னால் இருக்கும் பந்தலுக்கு மேலே சென்று விழுந்தது. டென்னிஸ் பந்தில் அப்படி அடிக்க முயற்சி செய்திருக்கிறேன். ஆனால் பந்து மட்டையில் பட்டு வேறெங்கோ பறந்து போகிறது.
ஏன் களத்தில் எப்போதும் கோபமாகவே காணப்படுகிறீர்கள்?
நான் வெற்றி பெறுவதற்காகத் தான் ஆடுகிறேன். நானும் களத்தில் சில சமயம் ஜோக் அடிப்பதுண்டு. கேப்டனாக இருக்கும்போது அப்படிச் செய்ய முடியாது. நான் களத்தில் எப்போதும் தீவிரமாகவே இருக்கிறேன். அதனால் என்னைப் பார்த்தால் கோபமாக இருப்பதாகத் தெரியும். ஆனால் அப்படி அல்ல. கோபம் வரும். ஆனால் எப்போதும் அல்ல.
எதைப் பற்றியாவது உங்களுக்கு பயம் இருக்கிறதா?
கடந்த ஆண்டு இங்கிலாந்து சுற்றுப்பயணம் வரையிலும் எனக்குத் தோல்வியைக் கண்டு பயமாக இருந்தது. அந்தத் தொடருக்குப் பிறகு நான் நிறைய விஷயங்களைக் கற்றுக்கொண்டேன். வாழ்க்கையில் எதன் மீதும் பற்றுதலோடு இருக்கக் கூடாது. நண்பர்கள், குடும்பம், குழந்தைகள் என்று யாராக இருந்தாலும் சரி. இதை இழந்துவிடுவோமே என்று பயப்படும் அளவுக்கு எதன் மீதும் பற்று வைக்கக் கூடாது.
தோல்விகளை எண்ணி மிகவும் வருந்தினேன். தோல்வி குறித்த பயத்திலிருந்து வெளியே வருவது மிகவும் கடினம். முடிவைப் பற்றிக் கவலைப்படாமல் இருப்பதன் மூலம் அந்த பயத்திலிருந்து விடுபட்டேன். இப்போதும் அந்த பயம் அவ்வப்போது எட்டிப்பார்க்கத்தான் செய்கிறது. அதை வெல்வது எப்படி என்பதைக் கற்றுக்கொண்டு வருகிறேன்.
உங்கள் மீது குடும்பத்தின் செல்வாக்கு?
நிறைய. நான் அதிருஷ்டக்காரன். மூன்றாவதாகப் பிறந்தேன். என் அண்ணன் விகாஸும் அக்கா பாவனாவும் எல்லாவற்றையும் பார்த்துக்கொள்வார்கள். குடும்பப் பொறுப்பை என் அண்ணன் ஏற்றுக் கொண்டார். எனக்கு எந்த நெருக்கடியும் கிடையாது. அப்பா பிரேம் கோலி யாரையும் சார்ந்திருக்க மாட்டார். கடுமையாக உழைத்து எங்களை இந்த நிலைக்குக் கொண்டுவந்திருக்கிறார்.
14 வயதுக்குட்பட்டோருக்கான டெல்லி அணியில் இடம்பெற முடியாமல்போனது என்னைக் கலங்கவைத்துவிட்டது. டெல்லியில் அமைப்பு எப்படி இயங்கும் என்பது உங்களுக்குத் தெரியும். யாரையாவது ‘கவனித்தால்’தான் உள்ளே போக முடியும். ஆனால் என் அப்பா அந்த வழியை நிராகரித்துவிட்டார். அடுத்த ஆண்டு என் தகுதியாலேயே நான் தேர்வு பெற்றேன். என் அம்மா எனக்கு மிகவும் செல்லம் கொடுப்பார். கிரிக்கெட்டைப் பற்றிப் பேசவே மாட்டார். குடும்பத்திடமிருந்து எனக்குக் கிடைக்கும் ஆதரவு விலைமதிப்பற்றது.
ஊடகங்கள் பற்றி?
நெறிமுறைகளைக் கடைப்பிடிக்க வேண்டியது அவசியம். சில சமயம் ஊடகங்கள் பொறுப்பில்லாமல் நடந்துகொள்வதாக எனக்குத் தோன்றுகிறது. இப்போது நடந்து முடிந்த தொடரை எடுத்துக் கொள்ளுங்கள். நாங்கள் நன்றாக விளையாடினோம். ஆனால் எல்லோரும் பிட்சைப் பற்றியே எழுதுகிறார்கள். மட்டையாளர்கள் சரியாக ஆடவில்லை என்கிறார்கள்.
பந்து வீச்சாளர்கள் நன்றாக வீசினார்கள் என்று எழுதுவதில்லை. எதிர்மறையாகத்தான் எழுதுவோம் என்று சொன்னால் ஆட்டக்காரர்கள் உங்களிடம் நன்றாக நடந்துகொள்வார் கள் என்று எதிர்பார்க்காதீர்கள். மோசமாக ஆடும்போது விமர்சியுங்கள். நன்றாக ஆடும்போது நல்ல விஷயங்களையும் சொல்லுங்கள்.
எப்படி நினைவுகூரப்பட வேண்டும் என்று விரும்புகிறீர்கள்?
கிரிக்கெட் ஆட்டத்தில் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தியவனாக நினைவுகூரப்பட வேண்டும் என்று விரும்புகிறேன். இந்த விளையாட்டு எனக்கு நிறையத் தந்திருக்கிறது. அதற்கு நான் ஆக்கபூர்வமாக ஏதாவது செய்ய வேண்டும். கிரிக்கெட் ஆட இளைஞர்களை ஊக்குவிக்கும் விதமாகப் பங்களிக்க வேண்டும்.
டெஸ்ட் கிரிக்கெட்டை அதற்குரிய இடத்திற்குக் கொண்டு செல்ல விரும்புகிறேன். அது உச்சத்தில் இருக்க வேண்டும். டெஸ்ட் போட்டிகளில் அரங்கு நிறைந்திருப்பதை நான் பார்த்திருக்கிறேன். அது திரும்பவும் நிகழ வேண்டும் என்று விரும்புகிறேன். டெஸ்ட் ஆட் டத்தை நான் முடித்துக்கொள்ளும் போது என் சக ஆட்டக்காரர்களுடன் வலுவான நட்பு எனக்கு இருக்கும் என்றால் நான் மகிழ்ச்சி அடைவேன்.
சுருக்கமாக தமிழில்: அரவிந்தன்
© தி இந்து (ஆங்கிலம்)