அசைக்க முடியாத உறுதியாலும், கவனத்தாலும் அணி முதலிடத்தைப் பிடித்துள்ளது: ரவி சாஸ்திரி பெருமிதம்

அசைக்க முடியாத உறுதியாலும், கவனத்தாலும் அணி முதலிடத்தைப் பிடித்துள்ளது: ரவி சாஸ்திரி பெருமிதம்
Updated on
1 min read

ஐசிசி டெஸ்ட் தரவரிசையில் இந்திய கிரிக்கெட் அணி முதலிடத்தைப் பிடித்ததைத் தொடர்ந்து அணி வீரர்களின் மன உறுதியை, தீர்மானத்தைப் பாராட்டி அணியின் தலைமைப் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி ட்வீட் செய்துள்ளார்.

ஐசிசி டெஸ்ட் தரவரிசை வெளியிடப்பட்டுள்ளது. இதில் இந்தியா முதலிடத்தையும், நியூஸிலாந்து அணி இரண்டாவது இடத்தையும் பெற்றுள்ளது. இரண்டு அணிகளும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பின் இறுதிப் போட்டியில் விளையாடவுள்ளன.

இந்திய அணி 121 புள்ளிகளையும், நியூஸிலாந்து அணி 120 புள்ளிகளையும் பெற்றுள்ளன. கடந்த ஆண்டில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 2-1 என்கிற கணக்கிலும், இங்கிலாந்துக்கு எதிராக 3-1 என்கிற கணக்கிலும் இந்திய அணி டெஸ்ட் தொடரை வென்றதால் முதலிடத்தைப் பிடித்துள்ளது.

இதுகுறித்துப் பெருமிதம் தெரிவித்திருக்கும் இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளர் ரவி சாஸ்திரி, "இந்த இந்திய அணி அசைக்க முடியாத தீர்மானத்தையும், கவனத்தையும் காட்டி முதலிடம் பெற்றூள்ளது. அணி வீரர்கள் பெற்றிருக்கும் துல்லியமான வெற்றி இது. நடுவில் விதிமுறைகள் மாற்றப்பட்டன. ஆனால், தங்களுக்கு முன் வந்த ஒவ்வொரு தடையையும் இந்திய அணி வென்றுள்ளது. கடுமையான சூழலில் என் வீரர்கள் கடுமையாக ஆடியுள்ளனர். இந்த துணிச்சலான அணியை நினைத்துப் பெருமை கொள்கிறேன்" என்று ட்வீட் செய்துள்ளார்.

சமீபத்திய மதிப்பீட்டின்படி மே 2020லிருந்து ஆடப்பட்ட அத்தனை டெஸ்ட் போட்டிகள் 100 சதவீதமும், அதற்கு முன் இரண்டு வருடங்கள் நடந்த டெஸ்ட் போட்டிகள் 50 சதவீதமும் கணக்கில் எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளன. இதனால் இங்கிலாந்து அணி ஆஸ்திரேலியாவை முந்தி தரவரிசையில் 3-வது இடத்தைப் பிடித்துள்ளது. மேலும் 2017-18இல் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக இங்கிலாந்து அடைந்த 4-0 தோல்வியும் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படவில்லை.

பாகிஸ்தான், மேற்கிந்தியத் தீவுகள், தென் ஆப்பிரிக்கா, இலங்கை ஆகிய அணிகள் முறையே ஐந்து, ஆறு, ஏழு, எட்டு ஆகிய இடங்களைப் பிடித்துள்ளன.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in