Last Updated : 14 May, 2021 03:12 AM

 

Published : 14 May 2021 03:12 AM
Last Updated : 14 May 2021 03:12 AM

விளையாட்டாய் சில கதைகள்: கிரிக்கெட் வர்ணனை தொடங்கிய நாள்

சர்வதேச அளவிலான கிரிக்கெட் போட்டிகள் மட்டுமின்றி உள்ளூர் கிரிக்கெட் போட்டிகளைக்கூட இன்றைக்கு நாம் நேரலையில் தொலைக்காட்சியில் பார்த்து வருகிறோம். இதற்கெல்லாம் அடித்தளமிட்ட நாள் மே 14.

1927-ம் ஆண்டு மே 14-ம் தேதிதான் முதல்முறையாக கிரிக்கெட் போட்டி ஒன்றின் நேரடி வர்ணனை பிபிசி வானொலியில் ஒலிபரப்பானது. 1927-ம் ஆண்டில் நியூஸிலாந்து அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டது. இந்த சுற்றுப் பயணத்தின்போது, நியூசிலாந்து அணிக்கும், இங்கிலாந்தின் கவுண்டி அணியான எஸெக்ஸ் அணிக்கும் இடையிலான கிரிக்கெட் போட்டி லெய்டன் நகரில் நடைபெற்றது. இப்போட்டியை கில்லிங்காம் என்பவர் பிபிசி தொலைக்காட்சியில் நேரலையாக சிறிது நேரம் வர்ணனை செய்தார். கில்லிங்காம் ஒரு முன்னாள் கிரிக்கெட் வீரர் என்பதோடு, அவர் ஒரு சிறந்த பேச்சாளர் என்பதாலும், உள்ளூர் மதப்பிரச்சார கூட்டங்களில் சிறப்பாக பேசி வந்ததாலும், கிரிக்கெட் போட்டியை முதல் முறையாக நேரடியாக வர்ணனை செய்யும் வாய்ப்பு அவருக்கு வழங்கப்பட்டது.

இதைத்தொடர்ந்து நியூஸிலாந்து மற்றும் இங்கிலாந்துக்கு இடையிலான டெஸ்ட் போட்டியின் நேரடி வர்ணனையும் சிறிது நேரத்துக்கு பிபிசியில் ஒலிபரப்பானது. கிரிக்கெட் ஒரு நிதானமான ஆட்டம் என்பதால், மக்கள் அதன் வர்ணனையை நீண்ட நேரம் ரசிக்க மாட்டார்கள் என்று பிபிசி வானொலி நினைத்ததால், சில நிமிடங்களுக்கு மட்டுமே அதன் நேரடி ஒலிபரப்பு இருந்தது. அந்த நேரடி வர்ணனையின்போதும் இடையிடையே பேண்ட் வாத்திய இசை ஒலிபரப்பானது.

ஆனால் எதிர்பார்த்ததற்கு மாறாக இந்த நிகழ்ச்சியை மக்கள் அதிகம் ரசித்தனர். இதைத்தொடர்ந்து கிரிக்கெட் டெஸ்ட் போட்டிகளின் நேரடி வர்ணனைகளை தொடர்ந்து வழங்க பிபிசி நிறுவனம் முடிவெடுத்தது. பிற்காலத்தின் பிராட்மேன் போன்ற பிரபலங்கள் உருவெடுக்கத் தொடங்கியதும் கிரிக்கெட் வர்ணனைகளும் புகழ்பெறத் தொடங்கின.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x