

விஜய் ஹஸாரே ஒருநாள் போட்டி தொடரில் டெல்லி-பரோடா அணிகள் இன்று மோதுகின்றன. இந்த ஆட்டத்தில் விராட் கோலிக்கு ஓய்வு கொடுக்கப்பட்டுள்ளது. அதேவேளையில் ஷிகர் தவண், இஷாந்த் சர்மா ஆகியோர் டெல்லி அணிக்காக விளையாடுவார்கள் என்றும் காம்பீருடன் இணைந்து தொடக்க வீரராக ஷிகர் தவண் களமிறங்குவார் எனவும் அணியின் பயிற்சியாளர் விஜய் தாகியா தெரிவித்துள்ளார்.
----------------------------------------------------------------------
சர்ச்சையில் ஷிகர் தவண்
தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான கடைசி டெஸ்டின் 2வது இன்னிங்ஸில் பகுதி நேர பந்து வீச்சாளராக இந்தியாவின் ஷிகர் தவண் 3 ஓவர்கள் வீசினார். இந்நிலையில் அவரது பந்து வீச்சு விதிமுறைகளுக்கு மாறாக இருப்பதாக புகார் எழுந்துள்ளது. இதையடுத்து 14 நாட்களுக்குள் ஷிகர் தவண் தனது பந்து வீச்சை பரிசோதனைக்கு உட்படுத்த வேண்டும் என ஐசிசி தெரிவித்துள்ளது.
----------------------------------------------------------------------
இலங்கை-நியூஸி. முதல் டெஸ்டில் இன்று மோதல்
இலங்கை கிரிக்கெட் அணி நியூஸிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. இரு அணிகள் இடையே 2 டெஸ்ட், 5 ஒருநாள் போட்டி இரண்டு டி 20 போட்டிகள் கொண்ட தொடர் நடைபெறுகிறது. இதன் முதல் டெஸ்ட் டுனிடின் நகரில் இந்திய நேரப்படி இன்று அதிகாலை 3 மணிக்கு தொடங்குகிறது.
இலங்கை அணி சமீபத்தில் மேற்கிந்தியத்தீவுகளுக்கு எதிரான உள்நாட்டு தொடரில் தொடர்ச்சியான வெற்றிகளை குவித்தது. நியூஸிலாந்து அணி ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் தோல்வியை சந்தித்திருந்தது. இதனால் உள்நாட்டில் நடைபெறும் இலங்கைக்கு எதிரான தொடரில் வெற்றி பெறும் முனைப்புடன் அந்த அணி வீரர்கள் களம் காண்கின்றனர்.
----------------------------------------------------------------------
நியூஸி. தொடரில் முகமது அமீர்
பாகிஸ்தான் அணியின் வேகப்பந்து வீச்சாளர் முகமது அமீர் கடந்த 2010-ம் ஆண்டு இங்கிலாந்து சுற்றுப்பயணத்தில் சூதாட்டத்தில் ஈடுப்பட்டதால் அவருக்கு 5 ஆண்டு தடை விதிக்கப்பட்டது. தற்போது தடை முடிந்து உள்ளூர் போட்டியில் விளையாடி வருகிறார். இந்நிலையில் ஜனவரி மாதம் பாகிஸ்தான் அணி நியூஸிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து விளையாட உள்ளது. இந்த தொடருக்கு முகமது அமீரை தேர்வு செய்வது குறித்து ஆலோசனை செய்துவருவதாக பாக். கிரிக்கெட் வாரிய தலைவர் ஷஹார்யார் கான் தெரிவித்துள்ளார். அதேவேளையில் இந்தியாவுக்கு எதிரான தொடரில் முகமது அமீர் பங்கேற்க வாய்ப்பில்லை என்றும் கூறினார்.