Published : 28 Dec 2015 02:56 PM
Last Updated : 28 Dec 2015 02:56 PM

சென்னை ஓப்பன் டென்னிஸ் போட்டிக்கு ரூ.2 கோடி: முதல்வர் ஜெயலலிதா வழங்கினார்

2016-ஆம் ஆண்டு சென்னை ஓபன் டென்னிஸ் போட்டியை சிறப்பான முறையில் நடத்திட ‘Lead Platinum Sponsor’ என்ற கையில் தமிழக அரசின் பங்களிப்பாக 2 கோடி ரூபாய்க்கான காசோலையை தமிழ்நாடு டென்னிஸ் சங்கத் தலைவர் எம்.ஏ. அழகப்பனிடம் முதல்வர் ஜெயலலிதா இன்று தலைமைச் செயலகத்தில் வழங்கினார்'

இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பில், ''தமிழகத்தில் திறமைமிக்க விளையாட்டு வீரர்களை கண்டறிந்து, அவர்கள் தேசிய மற்றும் பன்னாட்டு விளையாட்டுப் போட்டிகளில் கலந்து கொண்டு வெற்றி பெறும் வகையில் சிறந்த பயிற்சி அளித்தல், சாதனை புரியும் வீரர் வீராங்கனைகளுக்கு ஊக்கத் தொகை வழங்குதல், விளையாட்டு விடுதிகளை அமைத்தல், பன்னாட்டுத் தரத்தில் விளையாட்டு மைதானங்கள் அமைத்தல் போன்ற பல்வேறு திட்டங்களை ஜெயலலிதா தலைமையிலான அரசு செயல்படுத்தி வருகிறது.

டென்னிஸ் விளையாட்டில் உலகப் புகழ் பெற்ற விளையாட்டு வீரர்கள் கலந்து கொள்ளும் மிக முக்கிய போட்டியான சென்னை ஓபன் டென்னிஸ் போட்டி தமிழ்நாடு டென்னிஸ் சங்கத்தால் ஆண்டுதோறும் சென்னையில் நடத்தப்பட்டு வருகின்றது. இப்போட்டி ஏ.டி.பி. பன்னாட்டு தரவரிசை போட்டிகளில் ஒன்றாகும்.

முதல்வர் ஜெயலலிதா 2005-ஆம் ஆண்டு சென்னை ஓபன் டென்னிஸ் போட்டியினை சிறப்பாக நடத்திட முதன் முறையாக தமிழக அரசின் சார்பில் 1 கோடி ரூபாய் நிதி வழங்கினார். பின்னர் 2012-ஆம் ஆண்டு முதல் ஆண்டுதோறும் 2 கோடி ரூபாய் சென்னை ஓபன் டென்னிஸ் போட்டி நடத்திட தமிழ்நாடு அரசு வழங்கி வருகிறது.

உலகின் தலைசிறந்த டென்னிஸ் வீரர்களோடு, இந்தியாவின் தலைசிறந்த டென்னிஸ் வீரர்களும் பங்கு கொள்ளும் சென்னை ஓபன் டென்னிஸ் போட்டி சென்னை நுங்கம்பாக்கத்தில் அமைந்துள்ள தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய டென்னிஸ் விளையாட்டு அரங்கில் 4.1.2016 முதல் 10.1.2016 வரை நடைபெற உள்ளது.

2016-ஆம் ஆண்டு சென்னை ஓபன் டென்னிஸ் போட்டியை சிறப்பான முறையில் நடத்திட ‘Lead Platinum Sponsor’ என்ற கையில் தமிழக அரசின் பங்களிப்பாக 2 கோடி ரூபாய்க்கான காசோலையை தமிழ்நாடு டென்னிஸ் சங்கத் தலைவர் எம்.ஏ. அழகப்பனிடம் முதல்வர் ஜெயலலிதா இன்று தலைமைச் செயலகத்தில் வழங்கினார்'' என்று செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.



FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x