

ஐபிஎல் டி 20 தொடரில் புதிதாக இடம்பெற்றுள்ள ராஜ்கோட் அணிக்கு இந்திய வீரரை கேப்டனாக நியமிக்க வேண்டும் என சுனில் கவாஸ்கர் விருப்பம் தெரிவித்துள்ளார்.
ஐபிஎல் 9வது சீசன் போட்டிகள் அடுத்த ஆண்டு ஏப்ரல் 9ம் தேதி முதல் மே 29ம் தேதி வரை இந்தியாவில் நடைபெறுகிறது. இந்த சீசனில் சென்னை, ராஜஸ்தான் அணிகளுக்கு பதிலாக ராஜ்கோட், புனே அணிகள் இடம் பிடித்துள்ளன. இரு அணிகளும் முதற்கட்டமாக தலா 5 வீரர்களை ஏலத்தில் எடுத்துள்ளன.
ராஜ்கோட் அணி ரெய்னா, ஜடேஜா, மெக்குலம், ஜேம்ஸ் பால்க்னர், பிராவோ ஆகியோரை ஏலம் எடுத்துள்ளது. அந்த அணிக்கு மெக்குலம் அல்லது ரெய்னா கேப்டனாக நியமிக்கப்படலாம் என தகவல்கள் வெளியாகி உள்ளது. இந்நிலையில் ராஜ்கோட் அணிக்கு இந்திய வீரரையே கேப்டனாக நியமிக்க வேண்டும் என சுனில் கவாஸ்கர் விருப்பம் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் கூறும்போது, "இந்திய வீரருக்கு தான் உள்ளூர் வீரர்களின் பலம், பலவீனம் தெரியும். மெக்குலத்தை கேப்டனாக நியமித்தால் கட்டாயம் இந்திய பயிற்சியாளரையே தேர்வு செய்ய வேண்டும். ராஜ்கோட் அணியைவிட புனே அணி சற்று பலம் வாய்ந்ததே. தோனி இருந்தாலே அந்த அணிக்கு சாதகம் தான். அஸ்வின், டுபிளெஸ்ஸி ஆகியோர் புனே அணியில் இருப்பது பலம்" என்று தெரிவித்தார்.