Last Updated : 12 May, 2021 05:21 PM

 

Published : 12 May 2021 05:21 PM
Last Updated : 12 May 2021 05:21 PM

ஐசிசி டெஸ்ட் தரவரிசை; அசைக்க முடியாத இடத்தில் அஸ்வின்: பேட்டிங்கில் 3 இந்திய வீரர்கள்

சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் இன்று வெளியிட்ட டெஸ்ட் போட்டி வீரர்களுக்கான தர வரிசையில், இந்திய அணியின் சுழற்பந்துவீச்சாளர் ரவிச்சந்திரன் அஸ்வின் 2-வது இடத்துக்கு முன்னேறியுள்ளார்.

டெஸ்ட் போட்டிகளுக்கான பந்துவீச்சாளர் பட்டியலில் இந்திய வீரராக அஸ்வின் மட்டுமே இடம் பெற்றுள்ளார். 850 புள்ளிகளுடன் அஸ்வின் 2-வது இடத்தில் உள்ளார். 908 புள்ளிகளுடன் பாட் கம்மின்ஸ் முதலிடத்தில் உள்ளார்.

இந்திய அணியின் வேகப்பந்துவீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா 11-வது இடத்துக்குச் சரிந்துள்ளார். பேட்ஸ்மேன்கள் வரிசையில் இந்திய வீரர்களில் விராட் கோலி 5-வது இடத்திலும், ரிஷப் பந்த் 6-வது இடத்திலும், ரோஹித் சர்மா 8-வது இடத்திலும் உள்ளனர்.

ஜிம்பாப்வேக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் பாகிஸ்தான் வேகப்பந்துவீச்சாளர் ஷாகீன் அப்ரிடி, ஹசன் அலி, நுமான் அலி ஆகியோர் சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்தினர். இதையடுத்து, 6 இடங்கள் நகர்ந்து 14-வது இடத்துக்கு ஹசன் அலி முன்னேறியுள்ளார். ஷாகீன் அப்ரிடி 9 இடங்கள் முன்னேறி 22-வது இடத்துக்குச் சென்றார். நுமான் அலி 54-வது இடத்திலிருந்து 46-வது இடத்துக்கு நகர்ந்துள்ளார். இந்த மூவருக்கும் இது சிறப்பான தரவரிசையாகும்.

ஜிம்பாப்வேக்கு எதிரான 2-வது டெஸ்ட் போட்டியில் இந்த மூவரும் தலா 5 விக்கெட்டுகளை வீழ்த்தினர். ஒரு டெஸ்ட்டில் 3 பந்துவீச்சாளர்கள் 5 விக்கெட்டுகளை வீழ்த்துவது 28 ஆண்டுகளுக்குப் பின் இதுதான் முதல் முறையாகும். இதற்கு முன் கடைசியாக 1993ஆம் ஆண்டு இங்கிலாந்துக்கு எதிராக பால் ரீபெல், ஷேன் வார்ன், டிம் மே ஆகியோர் தலா 5 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

பாகிஸ்தான் பேட்ஸ்மேன் அபித் அலி 215 ரன்கள் சேர்த்ததையடுத்து தரவரிசையில் 38-வது இடத்துக்கு முன்னேறியுள்ளார். அசார் அலி 16-வது இடத்துக்கு முன்னேறியுள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x