Published : 11 May 2021 03:11 AM
Last Updated : 11 May 2021 03:11 AM

கரோனா பரவலால் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ள ஐபிஎல் டி-20 தொடரின் எஞ்சிய ஆட்டங்களை இனிமேல் இந்தியாவில் விளையாட முடியாது: பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலி தகவல்

கரோனா வைரஸ் தொற்று பரவலால் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ள ஐபிஎல் டி 20 கிரிக்கெட் தொடரின் எஞ்சிய ஆட்டங்களை இந்தியாவில் நடத்த முடியாது என இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் (பிசிசிஐ) தலைவர் சவுரவ் கங்குலி தெரிவித்துள்ளார்.

ஐபிஎல் டி 20 கிரிக்கெட் தொடரானது கடந்த வாரம் காலவரையின்றி தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. வீரர்களுக்கு அடுத்தடுத்து கரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டதைத் தொடர்ந்து இந்த நடவடிக்கையை உடனடியாக பிசிசிஐ மேற்கொண்டது. இதைத் தொடர்ந்து இந்தத் தொடரில் பங்கேற்ற வெளிநாட்டு வீரர்கள் அவர்களது தாயகத்துக்கு பாதுகாப்பாக அனுப்பி வைக்கப்பட்டு வருகின்றனர்.

இதற்கிடையே நிறுத்திவைக் கப்பட்டுள்ள ஐபிஎல் தொடரின் எஞ்சிய 31 ஆட்டங்களை எங்கு, எப்படி, எவ்வாறு நடத்துவது என்பது குறித்து பிசிசிஐ ஆலோசிக்கத் தொடங்கியுள்ளது. மேலும் சர்வதேச போட்டிகளுக்கு இடையே ஐபிஎல் தொடருக்கான கால அட்டவணையை தேடும் பணியிலும் தீவிர கவனம் செலுத்தி வருகிறது.

இந்நிலையில் பிசிசிஐ தலை வர் கங்குலி கூறும்போது, “போட்டியை நடத்துவதற்கு 14 நாட்கள்தனிப்படுத்துதல் போன்ற கடினமான விஷயங்கள் உள்ளன. எஞ்சிய போட்டிகள் இந்தியாவில் நடைபெற முடியாது. தனிப்படுத்துதலை கையாள்வது கடினம். மேலும் ஐஎபிஎல் தொடரை முடிப்பதற்கான அட்டவணையை எவ்வாறு கண்டுபிடிப்பது என்பதை இப்போதே கூறுவதும் கடினமான விஷயம்“ என்றார்.

இதற்கிடையே ஐபிஎல் தொடரின் எஞ்சிய ஆட்டங்களை இங்கிலாந்தில் உள்ள மெரில்போன் கிரிக்கெட் கிளப், வரும் செப்டம்பர் மாதம் நடத்த ஆர்வமாக இருப்பதாக தெரிவித்தது. ஆனால் இதுதொடர்பாக பிசிசிஐ இன்னும் ஆலோசிக்கவில்லை என தகவல் வெளியானது.

கடந்த ஆண்டு கரோனா வைரஸ் அச்சுறுத்தலால் ஒட்டுமொத்த ஐபிஎல் தொடரும் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

இதற்கிடையே இந்திய கிரிக்கெட் அணி ஐசிசி உலக டெஸ்ட்சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் நியூஸிலாந்துடன் மோதுவதற்காக வரும் ஜூன் மாத தொடக்கத்தில் இங்கிலாந்து புறப்பட்டுச் செல்கிறது. இந்த ஆட்டம் முடிவடைந்ததும் இங்கிலாந்து அணிக்கு எதிராக 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரிலும் இந்திய அணி பங்கேற்கிறது. இதனால் வரும் ஜூலை மாதம் இலங்கை அணிக்கு எதிராக அவர்களது நாட்டில் நடைபெறும் 3 ஒருநாள் போட்டி, 5 டி-20 ஆட்டங்கள் கொண்ட தொடரில் 2-ம் நிலை வீரர்களை கொண்ட இந்திய அணி பங்கேற்கும் என கூறப்படுகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x