

ரஞ்சி கோப்பை, ஐபிஎல் டி 20 தொடரில் இந்த ஆண்டு சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியுள்ள யூசுப் பதான், மார்ச் மாதம் நடைபெறும் டி 20 உலகோப்பையில் இந்திய அணியில் தனக்கு வாய்ப்பு கிடைக்கக்கூடும் என காத்திருக்கிறார்.
யூசுப் பதான் கடைசியாக இந்திய அணிக்காக கடந்த 2012 மார்ச்சில் நடைபெற்ற டி 20 ஆட்டத்தில் விளையாடி இருந்தார். 33 வயதான யூசுப் பதான் கூறும்போது, "இந்த சீசனில் ரஞ்சி கோப்பையில் பரோடா அணிக்காக சிறப்பாக விளையாடி உள்ளேன். ஐபிஎல் டி 20 தொடரில் கொல்கத்தா அணியிலும் சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தி உள்ளேன்.
மேலும் நன்கு பந்து வீசியும் வருகிறேன். விஜய் ஹஸாரே ஒருநாள் போட்டி தொடரில் அனைத்து ஆட்டங்களிலும் 9 முதல் 10 ஓவர்கள் வரை வீசுகிறேன். அதனால் சரியான திசையில் சென்று கொண்டிருக்கிறேன். டி 20 உலககோப்பையில் விளையாடுவதற்கான வாய்ப்புக்காக காத்திருக்கிறேன். சிறப்பாக ஆடுவதில் மட்டுமே கவனம் செலுத்துகிறேன்.
எனது திறனுக்கு தகுந்தபடி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துகிறேன், மற்றதை இறைவனிடம் விட்டுவிடுகிறேன். சிறப்பாக செயல்பட்டால் நிச்சயம் தேர்வுக்குழுவினர் கவனிப்பார்கள் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது. எனது இலக்கை அடைவதற்காக கடினமாக உழைத்து வருகிறேன்" என்று தெரிவித்தார்.
2007ம் ஆண்டு நடைபெற்ற டி 20 உலககோப்பையில் பாகிஸ்தான் அணிக்கு எதிராக அறிமுகமான யூசுப்பதான் இதுவரை 22 சர்வதேச டி 20 ஆட்டங்களில் பங்கேற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. .