Last Updated : 22 Dec, 2015 02:27 PM

 

Published : 22 Dec 2015 02:27 PM
Last Updated : 22 Dec 2015 02:27 PM

நியூஸிலாந்து அணியின் கேப்டன் பிரண்டன் மெக்கலம் பிப்ரவரியில் ஓய்வு: டி 20 உலககோப்பைக்கு கேப்டனாகிறார் வில்லியம்சன்

நியூஸிலாந்து கிரிக்கெட் அணியின் கேப்டன் பிரண்டன் மெக்கலம் அனைத்து வகையான சர்வதேச போட்டிகளில் இருந்தும் வரும் பிப்ரவரி மாதம் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக நடைபெறும் உள்ளூர் தொடர் முடிவடைந்ததும் ஓய்வு பெற உள்ளதாக நேற்று தெரிவித்தார்.

34 வயதான மெக்கலத்துக்கு பிப்ரவரி 12ம் தேதி ஆஸ்திரேலியாவுக்கு எதிராக தொடங்கும் முதல் டெஸ்ட் சர்வதேச அரங்கில் 100வது ஆட்டமாக அமைகிறது. இதைத்தொடர்ந்து 20ம் தேதி தொடங்கும் கடைசி டெஸ்டுடன் மெக்கலம் ஓய்வு பெறுகிறார். இதனால் இந்தியாவில் மார்ச் 8ம் தேதி தொடங்கும் டி 20 உலககோப்பைக்கு 25 வயதான வில்லியம்சன் கேப்டனாக செயல்படுவார் என தெரிகிறது.

வில்லியம்சன் இந்த ஆண்டில் அனைத்து வகையான சர்வதேச போட்டியிலும் 2,633 ரன்கள் குவித்துள்ளார். டெஸ்டில் 5 சதம் விளாசியுள்ள வில்லியம்சன் ஐசிசி பேட்ஸ்மேன்கள் பட்டியலில் முதலிடத்தை பிடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

ஓய்வு முடிவை அறிவித்த மெக்கலம் கூறும்போது, "ஆஸ்திரேலியாவுக்கு எதிராக கிறிஸ்ட்சர்ச்சில் நடைபெற உள்ள கடைசி டெஸ்ட் போட்டியின் போது ஓய்வு முடிவை அறிவிக்க முடிவு செய்திருந்தேன். ஆனால் டி 20 உலககோப்பைக்கான அணியை கருத்தில் கொண்டு இப்போதே அறிவித்துவிட்டேன். அணி தேர்வின் போது அறிவித்தால் தேவை இல்லாத குழப்பம் நிலவும். அதை தவிர்க்க இந்த முடிவை எடுத்தேன்.

நியூஸிலாந்து அணிக்காக விளையாட கிடைத்த வாய்ப்பை வீரராகவும், கேப்டனாகவும் மிகவும் நேசித்தேன். ஆனால் அனைத்து நல்ல விஷங்களுக்கும் ஒரு முடிவு வரவேண்டும். நாட்டுக்காக விளையாடியதில் சிறந்த அனுபவம் கிடைத்தது" என்று தெரிவித்தார்.

டி 20 போட்டிகளில் அதிக சிக்ஸர்கள் அடித்துள்ள மெக்கலம், "டெஸ்டில் அதிக சிக்ஸர்கள் அடித்துள்ள கில்கிறிஸ்டின் (100 சிக்ஸர்கள்) சாதனையை சிலதினங்களுக்கு முன்பு சமன் செய்தார். இந்த சாதனையை முறியடிப்பீர்களா என கேட்ட போது, கிரிக்கெட் வாழ்க்கையின் கடைசி கட்டத்தில் சிந்தனைக்கான நேரம் மற்றும் இடம் இல்லை. அடுத்த சில வாரங்களில் நடைபெறும் தொடர்களில் சிறப்பாக செயல்பட்டு அணியின் வெற்றிக்கு உதவ வேண்டும் என்ற எண்ணம் மட்டுமே உள்ளது" என்றார்.

ஒருநாள் போட்டியில் 2002ல் ஆஸ்ரேலியாவுக்கு எதிராக அறிமுகமான மெக்கலம், இரண்டு வருடங்கள் கழித்து தான் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்டில் முதன்முறையாக களமிறங்கினார். 254 ஒருநாள் போட்டிகளில் பங்கேற்றுள்ள மெக்கலம் 5 சதங்களுடன் 5,909 ரன் குவித்துள்ளார். டெஸ்டில் 99 ஆட்டங்களில் 11 சதங்களுடன் 6,273 ரன் சேர்த்துள்ளார்.

52 டெஸ்ட் போட்டிகளில் விக்கெட் கீப்பராக செயல்பட்டுள்ள மெக்கலம் 194 கேட்ச் செய்துள்ளார். இவர் தலைமையில் நியூஸிலாந்து அணி 31 டெஸ்டில் பங்கேற்று தலா 11 வெற்றி, 11 டிரா கண்டுள்ளது. ஒருநாள் போட்டியை பொறுத்தவரையில் கடந்த மார்ச் மாதம் நடைபெற்ற 50 ஓவர் உலககோப்பையில் முதன்முறையாக இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது.

ஐபிஎல் டி 20 தொடரிலும் மெக்கலம் பங்கேற்றுள்ளார். 2008 முதல் 2010 வரை கொல்கத்தா அணிக்காகவும், 2012-2013 வரை கொச்சி அணிக்காகவும், அதன் பின்னர் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியிலும் விளையாடிய அவர் அடுத்த சீசனில் ராஜ்கோட் அணிக்காக களமிறங்க உள்ளார்.

2014ம் ஆண்டு வெலிங்டனில் இந்தியாவுக்கு எதிரான டெஸ்டில் மெக்கலம் முச்சதம் அடித்தார். இதே ஆண்டில் அவர் பாகிஸ்தானுக்கு எதிராக இரட்டை சதமும், இலங்கைக்கு எதிராக 195 ரன்களும் விளாசினார். இதன் மூலம் 2014ல் டெஸ்ட் போட்டிகளில் ஆயிரம் ரன்களை குவித்த முதல் நியூஸிலாந்து வீரர் என்ற பெருமையை பெற்றார்.

2013ல் தென் ஆப்பிரிக் காவுக்கு எதிரான உள்ளூர் தொடரில் 2 டெஸ்டிலும் நியூஸிலாந்து இன்னிங்ஸை தோல்வியை தழுவியது. கேப்டவுன் டெஸ்டில் 45 ரன்களுக்கு சுருண்டது. இந்த தொடர் முடிந்ததும் கேப்டன் பதவி ராஸ் டெய்லரிடம் இருந்து பறிக்கப்பட்டு மெக்கலத்திடம் ஒப்படைக்கப்பட்டது. அவர் தோல்வியில் இருந்து அணியை மீட்டெடுத்தார். சொந்த மண்ணில் நியூஸிலாந்து அணி சமீபத்தில் தொடர்ச்சியாக 13 டெஸ்டில் தோல்வியை சந்திக்காமல் சாதனையை நிகழ்த்தியது குறிப்பிடத்தக்கது

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x