ராஜஸ்தான் ராயல்ஸ் அணி வீரர் சேத்தன் சகாரியாவின் தந்தை கரோனாவுக்கு பலி

ராஜஸ்தான் ராயல்ஸ் வீரர் சேத்தன் சக்காரியா | படம் ஏஎன்ஐ
ராஜஸ்தான் ராயல்ஸ் வீரர் சேத்தன் சக்காரியா | படம் ஏஎன்ஐ
Updated on
1 min read

ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் வேகப்பந்துவீ்ச்சாளர் சேத்தன் சகாரியாவின் தந்தை கஞ்சிபாய் சக்காரியா கரோனா தொற்றால் இன்று உயிரிழந்தார்.

கடந்த சில நாட்களாக கரோனாத் தொற்றால் மிகவும் மோசமான நிலையில் இருந்த 42 வயதான கஞ்சிபாய் சக்காரியா சிகிச்சை பலன் அளிக்காமல் உயிரிழந்தார். கடந்த ஜனவரி மாதம் சயத் முஷ்டாக் அலி கோப்பைத் தொடரில் சேத்தன் சக்காரியா விளையாடும்போதுதான், தனது மூத்த சகோதரரை இழந்தார், அதற்குள் இப்போது தனது தந்தையை கரோனாவில் இழந்துள்ளார்.

இது குறித்து சவுராஷ்டிரா கிரிக்கெட் அமைப்பு வெளியிட்ட செய்தியில் “ சேத்தன் சக்காரியாவின் தந்தை உயிரிழந்த செய்தி கேட்டு சவுராஷ்டிரா கிரிக்கெட் சங்கத்தில் ஒவ்வொருவரும் ஆழ்ந்த வருத்தத்தைத் தெரிவிக்கிறோம். சேத்தன் சகாரியாவின் குடும்பத்தினருக்கு மனவலிமையை அளிக்கவும், சக்காரியாவின் தந்தையின் ஆத்மா சாந்தி அடையவும் வேண்டுகிறோம் “ எனத் தெரிவித்தார்.

ராஜஸ்தான் ராயல்ஸ் அணி நிர்வாகம் சார்பில் ட்விட்டரில் பதிவிட்ட கருத்தில் “ கரோனா வைரஸ் பாதிப்பில் சேத்தன் சக்காரியாவின் தந்தை கஞ்சிபாய் சக்காரியா உயிரிழந்த செய்தி கேட்டு வேதனை அடைந்தோம். சேத்தன் சக்காரியாவுடன் தொடர்பில் இருந்து வருகிறோம்.

இந்த கடினமான நேரத்தில் அவருக்குத் தேவையான உதவிகளை வழங்குவோம்” எனத் தெரிவிக்கப்பட்டது. ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் அணிக்காக சேத்தன் சக்காரியா 7 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

முன்னதாக கடந்த வாரம் இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் ஆல்ரவுண்டர் வேதா கிருஷ்ணமூர்த்தி தனது சகோதரி வத்ஸலாவை கரோனாவுக்கு பலிகொடுத்தார். தனதுசகோதரியை இழப்பதற்கு 2 வாரங்களுக்கு முன்புதான், தனது தாயையும் வேதா இழந்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in