Last Updated : 09 May, 2021 03:15 AM

 

Published : 09 May 2021 03:15 AM
Last Updated : 09 May 2021 03:15 AM

விளையாட்டாய் சில கதைகள்: அலையில் ஆடும் தேவதை

இந்தியர்கள் அதிகம் பங்கேற்காத விளையாட்டுகளில் ஒன்று அலைச்சறுக்கு விளையாட்டு. இந்நிலையில் இந்த விளையாட்டில் மெல்ல மெல்ல தனது தடங்களைப் பதித்து வருகிறார் இஷிதா மாளவியா. 29 வயதான இஷிதா மாளவியா, பல்வேறு தொண்டு நிறுவனங்களுக்காக அலைச்சறுக்கு விளையாட்டுகளில் ஈடுபட்டு வருகிறார்.

அலைச்சறுக்கு விளையாட்டின் மீது மாளவியாவுக்கு விருப்பம் ஏற்பட்டது 2007-ம் ஆண்டில்தான். இந்த ஆண்டில், இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்த ஜெர்மனி அலைச்சறுக்கு வீரர் ஒருவரைச் சந்தித்துள்ளார் மாளவியா.

இதுபற்றி கூறும் மாளவியா, ‘‘அந்த ஜெர்மானியர் மூலம், நான் ஒரு ஆசிரமத்தைக் கண்டுபிடித்தேன். அந்த ஆசிரமத்தில் இருந்தவர்கள் பெரும்பாலும் அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலத்தை சேர்ந்தவர்களாக இருந்தனர். அவர்களிடம் பேசிக்கொண்டிருந்தபோது, எங்கள் வீட்டில் இருந்து ஒரு மணிநேர பயணத்தில் இருக்கும் இடத்தில், அவர்கள் அலைச்சறுக்கு விளையாட்டில் ஈடுபடுவது தெரிந்தது. நானும் அவர்களுடன் சேர்ந்து அலைச்சறுக்கு விளையாட்டில் ஈடுபடத் தொடங்கினேன். அப்படித்தான் எனக்கு இந்த விளையாட்டு அறிமுகமானது’’ என்கிறார்.

அலைச்சறுக்கில் ஈடுபடுவதால், மாளவியா கறுத்துவிடுவார் என்று கூறி, ஆரம்பத்தில் அவரது பெற்றோர் அவருக்கு தடை விதித்துள்ளனர். பின்னர், மாளவியாவுக்கு அதில் உள்ள விருப்பத்தை தெரிந்துகொண்டதால் போட்டிகளில் பங்கேற்க அனுமதித்துள்ளனர். இதன் பிறகு சில ஆண்டுகள் கழித்து, ‘ஷாகா’ என்ற பெயரில் அலைச்சறுக்கு கிளப் ஒன்றை மாளவியா தொடங்கியுள்ளார். இதன்மூலம், தான் அலைச்சறுக்கு விளையாட்டுகளில் ஈடுபடுவது மட்டுமின்றி, இதில் ஈடுபட விரும்புபவர்களுக்கும் பயிற்சி கொடுத்துள்ளார்.

அலைச்சறுக்கு விளையாட்டுகளில் பங்கேற்று பதக்கங்களை வெல்ல வேண்டும் என்பது மாளவியாவின் விருப்பம் அல்ல. அதைவிட தனது விளையாட்டுத் திறமை மூலம் பல தொண்டு நிறுவனங்களுக்கு நிதி திரட்டுவதே அவரது லட்சியமாக உள்ளது. இதனால் பல்வேறு தொண்டு நிறுவனங்களுக்காக அலைச்சறுக்கு விளையாட்டுகளில் ஈடுபட்டு வருகிறார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x