

பிஎஸ்எல் டி 20 தொடரில் நட்சத்திர வீரர்கள் அந்தஸ்து பட்டியலில் தங்களது பெயர் இடம் பெறாததால் மிஸ்பா உல்-ஹக், யூனுஸ்கான் ஆகியோர் அதிருப்தி அடைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத் தின் ஆதரவுடன் பிஸ்எல் டி 20 தொடர் வரும் பிப்ரவரி மாதம் துபையில் நடைபெறுகிறது. இந்த தொடரில் 5 அணிகள் கலந்து கொள்கின்றன. இந்நிலையில் இந்த அணிகளுக்கான நட்சத்திர அந்தஸ்து வீரர்கள் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இதில் கிறிஸ் கெய்ல், கெவீன் பீட்டர்சன், அப்ரீடி, ஷோயிப் மாலிக், வாட்சன் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.
பாகிஸ்தான் அணியின் சீனியர் வீரர்களான மிஸ்பா உல்-ஹக், யூனுஸ்கான் ஆகியோருக்கு நட்சத் திர அந்தஸ்து வீரர்கள் பட்டியலில் இடம் கிடைக்கவில்லை. இதனால் அதிருப்தி அடைந்த அவர்கள் தங்களுக்கு கேப்டன் பதவியாவது வழங்க வேண்டும். இல்லையென்றால் தொடரில் இருந்து விலகுவோம் என பாக். கிரிக்கெட் வாரியத்திடம் தெரிவித்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது.
யூனுஸ்கான் தற்போது டெஸ்டில் மட்டும் விளையாடி வருகிறார். இவர் தலைமையில் பாக். அணி 2009ம் ஆண்டு டி 20 தொடரை வென்றுள்ளது. அதே வேளையில் டெஸ்ட் அணிக்கு கேப்டனாக உள்ள மிஸ்பா, பாகிஸ்தானின் டி 20 அணிக்கும் கேப்டனாக இருந்துள்ளார்.
குயிட்டா அணியின் உரிமையாளரான நதீம் ஓமர் கூறும்போது, " தொடரில் பங்கேற்கும் 5 அணிகளும், பாக். வாரியம் வழங்கிய நட்சத்திர அந்தஸ்து வீரர்கள் பட்டியலில் இருந்த கிறிஸ் கெய்ல், கெவீன் பீட்டர்சன், அப்ரீடி, ஷோயிப் மாலிக், வாட்சன் ஆகியோரை ஒப்பந்தம் செய்துள்ளோம். மற்ற வீரர்களை பிளாட்டினம், தங்கம், வெள்ளி, வளரும் வீரர்கள் ஆகிய பிரிவுகளில் தேர்வு செய்ய உள்ளோம்" என்றார்.
வெளிநாட்டு வீரர்களான கெய்ல், வாட்சன், பீட்டர்சன் ஆகியோருக்கு பாக். வாரியம் முக்கியத்துவம் கொடுத்துள்ளதால் மிஸ்பா, யூனுஸ்கான் ஆகியோர் கடும் அதிருப்தியில் உள்ளனராம். பீட்டர்சன் ஓராண்டுக்கு மேலாக இங்கிலாந்து அணியில் இடம் பெறவில்லை. வாட்சன் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றுவிட்டார். இவர்களுக்கு கொடுக்கப்பட்ட முக்கியத்துவம் ஏன் தங்களுக்கு வழங்கப்படவில்லை எனவும் அவர்கள் கேள்வி எழுப்பியுள்ளதாக இருவருக்கும் நெருங்கிய வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
இதற்கிடையே முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் ஷிகந்தர் சர்ச்சையை கிளப்பியுள்ளார். பிஎஸ்எல் தொடரில் இஸ்லாமாபாத் அணிக்கு பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ள ஆஸி. முன்னாள் வீரர் டீன் ஜோன்ஸ் குறித்து சர்ச்சை கருத்து தெரிவித்துள்ளார்.
டீன் ஜோன்ஸ்க்கு சூதாட்டத் தில் தொடர்பு இருப்பதாக சந்தேகப்பட்டு தான் ஆஸி. வாரியம் அவரை கழற்றிவிட்டது. வாரியம் கொடுத்த நெருக்கடியால் தான் அவர் அப்போது ஓய்வு பெற்றார் என்றும் ஷிகந்தர் தெரிவித்துள்ளார்.