

2015ம் ஆண்டுக்கான ஐசிசி விருது அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் ஆண்டின் சிறந்த வீரர் விருதுக்கும், சிறந்த டெஸ்ட் வீரர் விருதுக்கும் தேர்வாகி உள்ளார். ஒருநாள் போட்டியின் சிறந்த வீரராக தென் ஆப்பிரிக்காவின் டி வில்லியர்ஸ் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
ஆண்டின் சிறந்த வீரர் விருதை பெறும் 4வது ஆஸ்திரேலிய வீரர் ஸ்மித் ஆவார். ரிக்கி பாண்டிங் (2006, 2007), மிட்செல் ஜாண்சன் (2009, 2014), மைக்கேல் கிளார்க் (2013) ஆகியோரும் இந்த விருதை பெற்றுள்ளனர்.
7வது வீரர்
2004ம் ஆண்டு முதல் வழங்கப்பட்டும் இந்த விருதுகளை டிராவிட் (2004), பிளின்டாப்-காலிஸ் (கூட்டு வெற்றியாளர்கள் 2005), சந்தர்பால் (2008), சச்சின் டெண்டுல்கர் (2010), ஜோநாதன் டிரோட் (2011), சங்கக்கரா (2012) ஆகியோரும் கைப்பற்றி யுள்ளனர்.
ஒரே ஆண்டில் இரு விருதுகளை பெறும் 7வது வீரர் என்ற பெருமையும் பெற்றுள்ளார் ஸ்மித். இதற்கு முன்னர் டிராவிட், காலிஸ், பாண்டிங், சங்கக்கரா, கிளார்க், ஜாண்சன் ஆகியோர் இந்த சாதனையை புரிந்துள்ளனர்.
2014 செப்டம்பர் 18ம் தேதி முதல் 2015 செப்டம்பர் 13 வரையிலான காலக்கட்டத்தில் வீரர்களின் ஆட்டத்திறன் கணக்கில் எடுக்கப்பட்டு விருதுகளுக்கு தேர்வு செய்யப்பட்டனர். இந்தக் காலக்கட்டத்தில் 26 வயதான ஸ்டீவ் ஸ்மித் 13 டெஸ்டில் 1,734 ரன்களை 82.57 என்ற சராசரியில் சேர்த்துள்ளார். 7 சதங்களும், 6 அரை சதங்களும் அடித்துள்ளார். அதேவேளையில் 26 ஒருநாள் போட்டியில் 4 சதம், 8 அரைசதங்களுடன் 1,249 ரன்களை 59.47 என்ற சராசரியில் எடுத்துள்ளார். 2015ம் ஆண்டு உலககோப்பையை வென்ற ஆஸி. அணியில் ஸ்மித் இடம் பெற்றிருந்தார்.
டி வில்லியர்ஸ்
ஒருநாள் போட்டியின் சிறந்த வீரர் விருதுக்கு 2வது முறை யாக டி வில்லியர்ஸ் தேர்வு செய்யப்பட்டார். அவர் கடந்த 2010ம் ஆண்டிலும் இந்த விருதை பெற்றிருந்தார். டி வில்லியர்ஸ் 20 ஆட்டத்தில் 1,265 ரன்களை 79 என்ற சராசரியில் குவித்துள்ளார். ஸ்டிரைக் ரேட் 128.4 ஆகும். 2 சதம் மற்றும் 9 அரை சதங்கள் அடித்துள்ளார்.
டி வில்லியர்ஸின் சக அணி வீரரான டு பிளெஸ்ஸி டி 20ல் சிறந்த வீரராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். கடந்த ஜனவரி மாதம் ஜோகன்னஸ்பர்க்கில் வங்கதேசத் துக்கு எதிரான ஆட்டத்தில் 56 பந் தில், 11 பவுண்டரி, 5 சிக்ஸர்களுடன் 119 ரன்களை விளாசினார் டு பிளெஸ்ஸி. இது சிறந்த ஆட்டமாக தேர்வாகி உள்ளது.
வளர்ந்து வரும் வீரர் விருதுக்கு ஆஸ்திரேலியாவின் ஹஸல்வுட் தேர்வு செய்யப்பட்டுள்ளார். ஸ்பிரிட் ஆப் கிரிக்கெட் விருதுக்கு (நேர்மையான வீரர் விருது) நியூஸிலாந்து கேப்டன் பிரண்டன் மெக்கலம் தேர்வானார். ஐசிசி உறுப்பு நாடுகளில் சிறந்த வீரர் விருதுக்கு ஐக்கிய அரபு அமீரக அணியின் குர்ராம் கான் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
ஒருநாள் போட்டியின் சிறந்த வீராங்கனையாக ஆஸ்திரேலியாவின் மெக் லனிங்கும், டி 20ல் சிறந்த வீராங்கனையாக ஸ்டெபானி டெய்லரும் தேர்வாகி உள்ளனர்.
சிறந்த நடுவருக்கான டேவிட் சேப்பர்டு விருதுக்கு ரிச்சர்டு கீட்டல்பரோ 3வது முறையாக தேர்வு செய்யப்பட்டுள்ளார். இந்த ஆண்டில் ஒரு பிரிவில் கூட இந்திய வீரர்கள் விருதுக்கு தேர்வு செய்யப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
ஸ்டீவ் ஸ்மித்:
சிறந்த வீரர்கள் உலகில் பலர் இருக்கும் போது இந்த விருதை நான் பெறுவது நம்பமுடியாததாக உள்ளது. எப்போதும் அணியின் வெற்றியே உள்நோக்கமாக இருக்கும். இதுபோன்ற விருது சிறப்பானது தான். விருதை பெறுவதில் பெருமை அடைகிறேன். 2015ம் ஆண்டு எனக்கு கலவையான உணர்வுகளை கொடுத்துள்ளது. ஒருநாள் போட்டி உலககோப்பையை வென்றது எனது கிரிக்கெட் வாழ்க்கையில் சிறப்பம்சமானது. கேப்டனாக நியமிக்கப்பட்டதில் பெருமையாக இருந்தாலும், ஆஷஸ் தொடரை இழந்தது ஏமாற்றமாக இருந்தது.
டி வில்லியர்ஸ்:
ஒருநாள் போட்டியின் சிறந்த வீரராக தேர்வு செய்யப்பட்டுள்ளது பெருமையாக உள்ளது. 2015ம் ஆண்டில் நினனவுகூறத்தக்க பல சிறப்பம்சங்கள் இருந்தாலும் அதிகமான ஏமாற்றங்களும் இருந்தது. வரும் ஆண்டுகளில் தென் ஆப்பிரிக்க அணியின் பல வெற்றிகளுக்கு என்னால் சிறந்த பங்களிப்பை கொடுக்க முடியும் என்ற நம்பிக்கை உள்ளது.