Last Updated : 07 May, 2021 03:12 AM

 

Published : 07 May 2021 03:12 AM
Last Updated : 07 May 2021 03:12 AM

விளையாட்டாய் சில கதைகள்: அப்பா கொடுத்த ஊக்கம்

இந்த ஐபிஎல் கிரிக்கெட் தொடரில், கீப்பிங் செய்வதுடன் ஸ்டம்புகளுக்கு பின்னால் நின்று பேசிக்கொண்டு, பந்துவீச்சாளர்களை உற்சாகப்படுத்தி ரசிகர்களைக் கவர்ந்துள்ளார் தினேஷ் கார்த்திக். கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் விக்கெட் கீப்பரான அவர், கீப்பிங் செய்யும்போது வர்ணனையாளர்களே சில நிமிடங்கள் அமைதி காக்கிறார்கள். தங்களைவிட தினேஷ் கார்த்திக் சிறப்பாக பேசுவதாக அவர்கள் கருதுவதே இதற்கு காரணம். குறிப்பாக வருண் சக்ரவர்த்தி பந்து வீசும்போது, “குச்சில போடு… குச்சில போடு...” என்று கொச்சைத் தமிழில் அவர் பேசுவது பலரையும் கவர்ந்துள்ளது.

தினேஷ் கார்த்திக், 1985-ம் ஆண்டு பிறந்தார். அவரது அப்பா கிருஷ்ணகுமார், முதல் டிவிஷன் கிரிக்கெட் போட்டிகளில் ஆடியவர். ஆனால் கிருஷ்ணகுமாரின் பெற்றோர் படிப்பில் கவனம் செலுத்துமாறு அவரை கட்டாயப்படுத்தியுள்ளனர். தனது நிலை தனது மகனுக்கு வரக்கூடாது என்று கிருஷ்ணகுமார் விரும்பினார். அதனாலேயே மகன் தினேஷ் கார்த்திக்கின் கிரிக்கெட் ஆர்வத்துக்கு தடை போடாமல், அதை ஊக்குவித்துள்ளார். தினேஷ் கார்த்திக் பயிற்சி பெறுவதற்காகவே, வீட்டில் பிட்ச் ஏற்படுத்தி, நெட் பிராக்டிஸ் செய்யும் வசதியை ஏற்படுத்திக் கொடுத்துள்ளார்.

2002-ம் ஆண்டுமுதல் தமிழக அணிக்காக கிரிக்கெட் போட்டிகளில் ஆடிவரும் தினேஷ் கார்த்திக், 2004-ம் ஆண்டில் இந்திய அணியில் இடம்பிடித்தார். ஆனால் சில ஆண்டுகளுக்கு பிறகு தோனி அணிக்கு வந்ததும் இவரது இடம் கேள்விக்குறியானது. அணியில் இடம் பிடிப்பதும், வெளியில் இருப்பதுமாக இருந்துள்ளார். ஆனால் சளைக்காமல் போராடி வருகிறார். இந்திய அணிக்காக இதுவரை 26 டெஸ்ட் போட்டிகளில் ஆடியுள்ள தினேஷ் கார்த்திக் 1,025 ரன்களைக் குவித்துள்ளார். மேலும் 94 ஒருநாள் போட்டிகளில் 1,752 ரன்களையும், 32 டி20 போட்டிகளில் 399 ரன்களையும் சேர்த்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x