

ராஜஸ்தான் ரஞ்சிக் கோப்பை அணியின் முன்னாள் லெக் ஸ்பின்னர் விவேக் யாதவ் கரோனா தொற்றால் பரிதாபமாக உயிரிழந்தார். அவருக்கு வயது 36.
ரஞ்சிக் கோப்பையை வென்ற ராஜஸ்தான் அணியில் விவேக் யாதவ் இடம் பெற்றிருந்தார். விவேக் யாதவுக்கு மனைவியும், ஒரு மகளும் உள்ளனர்.
கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருந்த விவேக் யாதவ், ஜெய்ப்பூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று அதிகாலை உயிரிழந்தார்.
இந்திய அணியின் முன்னாள் வீரரும், வர்ணனையாளருமான ஆகாஷ் சோப்ரா ட்விட்டரில் பதிவிட்ட கருத்தில், “ராஜஸ்தான் அணி வீரரும், என்னுடைய நெருங்கிய நண்பருமான விவேக் யாதவ் கரோனாவால் உயிரிழந்தார். அவரின் ஆத்மா சாந்தி அடையட்டும். அவரை நினைத்து வாடும் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கல்கள்” எனத் தெரிவித்துள்ளார்.
18 முதல்தரப் போட்டிகளில் விளையாடியுள்ள விவேக் யாதவ், 57 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். 2010-11 ரஞ்சிக்கோப்பை இறுதிப் போட்டியில் சிறப்பாகப் பந்துவீசி, 91 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை வீழ்த்தி ராஜஸ்தான் அணி கோப்பையை வெல்ல யாதவ் காரணமாக அமைந்தார். தனது 30-வது வயதில் கடைசியாக உள்நாட்டுப் போட்டிகளில் விவேக் யாதவ் விளையாடியிருந்தார்.
புற்றுநோய்க்கு விவேக் யாதவ் சிகிச்சை பெற்றுவந்த நிலையில்தான் கரோனா தொற்று ஏற்பட்டது. கரோனா தொற்று ஏற்பட்டபின் விவேக் யாதவின் உடல்நிலை மோசமடைந்தது குறிப்பிடத்தக்கது.