Last Updated : 06 May, 2021 04:57 PM

 

Published : 06 May 2021 04:57 PM
Last Updated : 06 May 2021 04:57 PM

ஐபிஎல் தொடரில் பங்கேற்ற ஆஸ்திரேலிய வீரர்கள் மாலத்தீவு புறப்பட்டனர்

பிரதிநிதித்துவப்படம்

புதுடெல்லி

கரோனா வைரஸ் பரவல் காரணமாக ஐபிஎல் டி20 தொடர் ரத்து செய்யப்பட்டதை அடுத்து, ஆஸ்திரேலிய வீரர்கள் மாலத்தீவு வழியாக ஆஸ்திரேலியா புறப்படுகின்றனர். இதற்காக இந்தியாவிலிருந்து மாலத்தீவு புறப்பட்டுச் சென்றனர்.

ஆஸ்திரேலிய முன்னாள் வீரர் மைக் ஹசி கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதால், அவர் மட்டும் உடன் செல்லவில்லை. மற்ற வீரர்கள் தனி விமானத்தில் மாலத்தீவு புறப்பட்டனர்.

கரோனா வைரஸ் பாதிப்பு ஏற்படாமல் ஐபிஎல் தொடர் மிகுந்த கவனத்துடன் நடத்தப்பட்டது. பல அடுக்குப் பரிசோதனை, தனிமைப்படுத்துதல் எனப் பாதுகாப்பான முறையில் வீரர்கள் விளையாடினர். ஆனால், இந்தியாவில் நிலவும் கரோனா வைரஸ் 2-வது அலை, ஐபிஎல் பயோ-பபுளுக்குள்ளும் புகுந்தது.

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி வீரர் வருண் சக்ரவர்த்தி, வாரியர், சன்ரைசர்ஸ் வீரர் விருதிமான் சாஹா, டெல்லி வீரர் அமித் மிஸ்ரா, சிஎஸ்கே பயிற்சியாளர்கள், மைக் ஹசி, பாலாஜி ஆகியோருக்குத் தொற்று ஏற்பட்டதையடுத்து, ஐபிஎல் தொடர் தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. இதையடுத்து, வெளிநாட்டு வீரர்களும் தங்கள் தாய்நாட்டுக்குப் புறப்பட்டு வருகின்றனர்.

இதில் இந்தியாவில் கரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்துள்ளதை அடுத்து வரும் 15-ம் தேதிவரை இந்தியாவிலிருந்து ஆஸ்திரேலியர்கள் யாரும் நாட்டுக்குள் வரக்கூடாது. அவ்வாறு வந்தால், 5 ஆண்டுகள் வரை சிறை தண்டனை என அந்நாட்டுப் பிரதமர் ஸ்டாக் மோரிஸன் எச்சரிக்கை விடுத்தார்.

இதையடுத்து, ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த ஐபிஎல் தொடரில் பங்கேற்ற வீரர்கள், பயிற்சியாளர்கள், வர்ணனையாளர்கள், பிற ஊழியர்கள் எனப் பலரும் மாலத்தீவு சென்று அங்கிருந்து விமானம் மூலம் ஆஸ்திரேலியா செல்கின்றனர். இதற்காக இன்று காலை இந்தியாவிலிருந்து மாலத்தீவுக்கு ஆஸ்திரேலியக் குழுவினர் புறப்பட்டுச் சென்றனர்.

இது தொடர்பாக ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் வெளியிட்ட அறிவிப்பில், “ ஆஸ்திரேலிய வீரர்கள், பயிற்சியாளர்கள், போட்டி அதிகாரிகள், வர்ணனையாளர்கள் என அனைவரும் இந்தியாவிலிருந்து பாதுகாப்பாகப் புறப்பட்டு மாலத்தீவு சென்றனர். மாலத்தீவில் ஆஸ்திரேலியக் குழுவினருக்கான பயண அனுமதி கிடைக்கும் வரை அங்கு தங்கியிருப்பார்கள், பயண அனுமதி கிடைத்தவுடன் அங்கிருந்து ஆஸ்திரேலியா புறப்படுவார்கள்.

மைக் ஹசிக்கு கரோனா பாதிப்பு ஏற்பட்டிருப்பதால், அவர் குணமடையும்வரை இந்தியாவில் இருப்பார். மைக் ஹசி பாதுகாப்பாக ஆஸ்திரேலியா வரும்வரை பிசிசிஐ அமைப்புடன் ஆஸ்திரேலிய வாரியம் தொடர்ந்து தொடர்பில் இருக்கும்” எனத் தெரிவிக்கப்பட்டது.

ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த 14 வீரர்கள் உள்பட மொத்தம் 40 பேர் ஐபிஎல் தொடரி்ல பங்கேற்றிருந்தனர்.

ஐபிஎல் தொடரில் விளையாடும் ஆஸ்திரேலிய வீரர்களுக்கு அரசு சார்பில் விமானம் ஏற்பாடு செய்ய முடியாது என பிரதமர் ஸ்காட் மோரிஸன் திட்டவட்டமாகத் தெரிவித்துவிட்டார். இதனால், மாலத்தீவில் உள்ள ஆஸ்திரேலியக் குழுவினர் அனைவரும் சொந்த செலவில்தான் ஆஸ்திரேலியா செல்கின்றனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x