Published : 24 Dec 2015 06:41 PM
Last Updated : 24 Dec 2015 06:41 PM

சதீஷின் ஆல்ரவுண்ட் திறமை: விஜய் ஹசாரே அரையிறுதியில் தமிழக அணி

விஜய் ஹஸாரே ஒருநாள் போட்டி தொடரில் தமிழக அணி, உத்தரபிரதேசத்தை 1 விக்கெட் வித்தியாசத்திலும், குஜராத் அணி 2 விக்கெட் வித்தியாசத்தில் விதர்பாவையும் தோற்கடித்து அரையிறுதிக்கு முன்னேறின.

அரையிறுதி ஆட்டங்களில் தமிழகம்-குஜராத், டெல்லி-இமாச்சல் பிரதேசம் அணிகள் மோதுகின்றன. 5 ஆண்டுகளுக்குப் பிறகு தமிழக அணி விஜய் ஹசாரே அரையிறுதிக்கு முன்னேறியுள்ளது.

உ.பி. அணி பேட்டிங்கின் போது அபாரமாக பந்து வீசிய ஆர்.சதீஷ் 10 ஓவர்கள் வீசி 2 மெய்டன்களுடன் 14 ரன்களை மட்டுமே விட்டுக் கொடுத்து 1 விக்கெட்டைக் கைப்பற்றினார். பிறகு பேட்டிங்கில் கடைசியில் பதட்டமான சூழ்நிலைகளுக்கிடையே பொறுமை காத்து வெற்றி தேடித் தந்தார். 38 பந்துகளில் 6 பவுண்டரிகளுடன் 34 ரன்கள் எடுத்து நாட் அவுட்டாகத் திகழ்ந்தார். மிகச்சரியாக ஆட்ட நாயகன் விருதுக்குத் தேர்வு செய்யப்பட்டார்.

41-வது ஓவரில் பியூஷ் சாவ்லா ரவிச்சந்திரன் அஸ்வின் மற்றும் அஸ்வின் கிரிஸ்ட் விக்கெட்டைக் கைப்பற்றி நெருக்கடி கொடுக்க, 168/9 என்ற நிலையில் ஆட்டம் ‘டை’ ஆனால் டாஸ்தான் வெற்றி அணியைத் தீர்மானிக்கும் என்ற நிலையில் 42-வது ஓவரை அனுபவசாலியான பிரவீண் குமார் வீசவந்தார். முதல் பந்து மிகத் துல்லியமான யார்க்கர் ஆனால் சதீஷ் அதனை தடுத்தாடினார். அடுத்த யார்க்கர் முயற்சி தாழ்வான புல்டாஸாக அமைய சதீஷ் அதனை நேராக மிட் ஆப் பீல்டருக்கு அடிக்க ரன் இல்லை, பதட்டம் கூடியது, அடுத்த பந்து ஸ்லோயர் ஒன்னாக அமைய, ஷார்ட்டாக அமைய சதீஷ் அதனை புல்ஷாட் ஆடி வெற்றி பெறச் செய்தார்.

முன்னதாக, முதலில் பேட் செய்த உத்தரபிரதேசம் 48.2 ஓவரில் 168 ரன்களுக்கு சுருண்டது. ரிங்குசிங் 60, பியூஸ் சாவ்லா 29 ரன் எடுத்தனர். தமிழகம் தரப்பில் பாலாஜி 3, அஸ்வின் 2 விக்கெட் கைப்பற்றினர்.

169 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிதான இலக்குடன் பேட் செய்த தமிழக அணி தொடக்கத்திலேயே விக்கெட்களை பறிகொடுத்தது. அபிநவ் முகுந்த் 2, தினேஷ் கார்த்திக் 0, பாபா அபராஜித் 9, பாலாஜி 0 ரன்களில் ஆட்டமிழந்தனர். 7.3 ஓவரில் 17 ரன்களுக்கு 4 விக்கெட்களை இழந்த நிலையில் முரளி விஜய்-பாபா இந்திரஜித் ஜோடி பொறுப்பாக ஆடியது.

இந்த ஜோடி 5வது விக்கெட்டுக்கு 64 ரன் சேர்த்தது. ஸ்கோர் 81 ஆக இருந்த போது முரளி விஜய் 33 ரன்னில் வெளியேறினார். அடுத்து வந்த சங்கர் 22 ரன்னில் ஆட்டமிழந்தார். பாபா இந்திரஜித் 78 பந்தில், 6 பவுண்டரிகளுடன் 48 ரன் எடுத்த நிலையில் ரன் அவுட் ஆனார். அப்போது ஸ்கோர் 32.4 ஓவரில் 127 ஆக இருந்தது. அதன்பின்னர் வந்த அஸ்வின் உறுதுணையுடன் சதிஷ் நிதானமாக ஆடினார்.

வெற்றிக்கு 7 ரன்கள் தேவை என்ற நிலையில் அஸ்வின் 7 ரன்னில் ஆட்டமிழந்தார். 40.3 ஓவரில் ஸ்கோர் 169 ஆக இருந்த போது 9வது விக்கெட்டாக அஸ்வின் கிறிஸ்ட்டை 4 ரன்னில் சாவ்லா ஆட்டமிழக்க செய்தார்.

எனினும் சதிஷ் நம்பிக்கையுடன் ஆடி வெற்றி தேடிக்கொடுத்தார். முடிவில் தமிழக அணி 41.3 ஓவரில் 9 விக்கெட் இழப்புக்கு 169 ரன் எடுத்து வெற்றி பெற்றது. சதிஷ் 34, ரகில் ஷா 1 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர். 1 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற தமிழக அணி அரையிறுதிக்கு முன்னேறியது.

குஜராத் வெற்றி

ஆளூரில் நடைபெற்ற மற்றொரு காலிறுதியில் விதர்பா-குஜராத் மோதின. முதலில் பேட் செய்த விதர்பா 48 ஓவரில் 195 ரன்களுக்கு அனைத்து விக்கெட்களையும் இழந்தது. ஜிதேஷ் சர்மா 51, பியாஸ் பஷால் 52, கனேஷ் சதிஷ் 47 ரன் எடுத்தனர். குஜராத் தரப்பில் பும்ராஹ் 4 விக்கெட் கைப்பற்றினார்.

196 ரன்கள் இலக்குடன் ஆடிய குஜராத் 48.1 ஓவரில் 8 விக்கெட் இழப்புக்கு 198 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. பார்தீவ் படடேல் 57, அக்ஸர் படேல் 36 ரன் எடுத்தனர். நாளை நடைபெறும் அரையிறுதி ஆட்டங்களில் தமிழகம்-குஜராத், டெல்லி-இமாச்சல் பிரதேசம் அணிகள் மோதுகின்றன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x