

டெல்லி பெரோஷாகோட்லா மைதா னத்தில் முன்னாள் வீரர்களுக்கு பாராட்டு விழா நடத்த பிசிசிஐ அனு மதி வழங்காததால் நிகழ்ச்சியை டெல்லி மாநில அரசு ரத்து செய்தது.
டெல்லி பெரோஷா கோட்லா மைதானத்தில் இந்தியா-தென் ஆப் பிரிக்கா அணிகள் இடையேயான கடைசி டெஸ்ட் போட்டி நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் நேற்றைய 3வது நாள் ஆட்டத்தின் மதிய உணவு இடைவேளையின் போது 1983 மற்றும் 2011ம் ஆண்டு உலககோப்பையை வென்ற இந்திய கிரிக்கெட் அணியில் இடம்பிடித்திருந்த டெல்லி வீரர்களுக்கு (பிஷன் சிங் பேடி, மொகீந்தர் அமர்நாத், மதன் லால், வீரேந்தர் சேவாக், கம்பீர்) பாராட்டு விழா நடத்தப்படும் என டெல்லி மாநில அரசு அறிவித்திருந்தது. விழாவில் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், வீரர்களை கவுரவிப்பார் என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் நேற்றுமுன்தினம் இரவு 10 மணி அளவில் இந்த விழாவுக்கு பிசிசிஐ அனுமதி வழங்க முடியாது என அறிவித்தது.
இதுதொடர்பாக பிசிசிஐ செயலாளர் அனுராக் தாகூர், டெல்லி கிரிக்கெட் சங்கத்துக்கு இ-மெயிலில் தகவல் அனுப்பினார். இதுகுறித்து டெல்லி கிரிக்கெட் சங்க பொருளாளர் ரவீந்தர் மான்சந்தா கூறும்போது, "ஐசிசி அங்கீகரித்துள்ள போட்டி நடைபெறும் மைதான பகுதியில் 3வது நபர்கள் பாராட்டு விழா நடத்த விதிமுறைகளின் படி அனுமதி கிடையாது. இந்த விஷயத்தில் நாங்கள் ஒன்றும் செய்ய முடியாது.
பிசிசிஐ எடுத்துள்ள முடிவின்படியே நாங்கள் செயல்பட முடியும். போட்டி நடைபெறும் பகுதி இல்லாமல் ஹில் பகுதி இருக்கை அருகே விழாவை நடத்திக்கொள்ளும்படி கூறினோம். ஆனால் அவர்கள் அதனை ஏற்க மறுத்துவிட்டனர். மேலும் நேற்று காலை 8.35 மணி அளவில் விழாவை ரத்து செய்துவிட்டதாக டெல்லி அரசு தரப்பில் அறிவித்தனர்" என்றார்.
சேவாக்கிற்கு மட்டும் பாராட்டு விழா நடத்தப்பட்டதே என மான்சந் தாவிடம் கேட்டபோது, அது பிசிசிஐ விழா என்று தெரிவித்தார்.