Published : 03 May 2021 03:15 AM
Last Updated : 03 May 2021 03:15 AM

ஜாஸ் பட்லர் விளாசலில் ராஜஸ்தான் அணி வெற்றி: 55 ரன்கள் வித்தியாசத்தில் ஹைதராபாத்தை வீழ்த்தியது

டெல்லி

ஐபிஎல் டி 20 கிரிக்கெட் தொடரில் ஜாஸ் பட்லரின் அதிரடி சதத்தால் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 55 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது ராஜஸ்தான் ராயல்ஸ் அணி.

டெல்லியில் நேற்று நடைபெற்ற இந்த ஆட்டத்தில் முதலில் பேட் செய்த ராஜஸ்தான் அணி 3 விக்கெட்கள் இழப்புக்கு 220 ரன்கள் குவித்தது. தொடக்க வீரரான ஜாஸ் பட்லர் 64 பந்துகளில், 8 சிக்ஸர்கள், 11 பவுண்டரிகளுடன் 124 ரன்கள் விளாசிய நிலையில் சந்தீப் சர்மா பந்தில் ஆட்டமிழந்தார். பட்லர் தனது சதத்தை 56 பந்துகளில் விளாசியிருந்தார். ஐபிஎல் தொடரில் பட்லரின் முதல் சதமாக இது அமைந்தது.

முன்னதாக ஜாஸ் பட்லர் 7 ரன்களில் இருந்தபோது ரஷித் கான் வீசிய 5-வது ஓவரில் லாங் ஆன் திசையில் கொடுத்த கேட்ச்சை விஜய் சங்கர் பிடித்கத் தவறினார். இதற்கான பலனை ஹைதராபாத் அணி அனுபவித்தது.

பட்லருக்கு உறுதுணையாக விளையாடிய கேப்டன் சஞ்சு சாம்சன் 33 பந்துகளில், 2 சிக்ஸர்கள், 4 பவுண்டரிகளுடன் 48 ரன்கள் எடுத்த நிலையில் விஜய் சங்கர் பந்தில் ஆட்டமிழந்தார். 2-வது விக்கெட்டுக்கு பட்லருடன் இணைந்து சாம்சன் 150 ரன்கள் சேர்த்தார். முன்னதாக மற்றொரு தொடக்க வீரரான ஜெய்ஸ்வால் 12 ரன்களில் ரஷித் கான் பந்தில் வெளியேறினார்.

221 ரன்கள் இலக்குடன் பேட் செய்த ஹைதராபாத் அணியால் 20 ஓவர்களில் 8 விக்கெட்கள் இழப்புக்கு 165 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. அதிகபட்சமாக மணீஷ் பாண்டே 31, ஜானி பேர்ஸ்டோ 30, கேப்டன் கேன் வில்லியம்சன் 20, கேதார் ஜாதவ் 19, மொகமது நபி 17, புவனேஷ்வர் குமார் 14, அப்துல் சமத் 10, விஜய் சங்கர் 8 ரன்கள் சேர்த்தனர். ராஜஸ்தான் அணி சார்பில் கிறிஸ்மோரிஸ், முஸ்டாபிஸூர் ரஹ்மான்ஆகியோர் தலா 3 விக்கெட்கள் வீழ்த்தினர். 55 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற ராஜஸ்தான் அணிக்கு இது 3-வது வெற்றியாக அமைந்தது. ஹைதராபாத் அணி 6-வது தோல்வியை சந்தித்தது.

இன்றைய ஆட்டம்

கொல்கத்தா - பெங்களூரு

இடம்: அகமதாபாத்

நேரம்: இரவு 7.30

நேரலை: ஸ்டார் ஸ்போர்ட்ஸ்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x