

அதிரடி துவக்க வீரர் சேவாக் இந்திய அணியில் நிறைய உற்சாகங்களைக் கொண்டு வந்தவர் என்று ராகுல் திராவிட் புகழாரம் சூட்டியுள்ளார்.
ஈ.எஸ்.பி.என்.கிரிக் இன்ஃபோ-வின் மாடர்ன் மாஸ்டர்ஸ் என்ற புதிய வீடியோ தொடரில் பேசியபோது ராகுல் திராவிட் இதனைத் தெரிவித்துள்ளார்.
"விரு (சேவாக்) பற்றி நினைத்தால், அவர் இந்திய அணிக்குள் கொண்டு வந்த மகிழ்ச்சிகளையே நான் குறிப்பிடுவேன், அவருடன் விளையாடுவது பெரும் மகிழ்ச்சி தரும் நிகழ்வாகும், அதே போல் ரசிகர்களிடத்தில் அவர் ஏற்படுத்திய உற்சாகமும் குறிப்பிடத்தகுந்தது.
என்னைப் பொறுத்த வரையில் துவக்க வீரர் ஆடும் விதங்களை பல வகையில் மாற்றி அமைத்தவர் சேவாக், துவக்க வீரர் எப்படி ஆடவேண்டும் என்ற பார்வையை மாற்றியவர் சேவாக்.
மட்டையை அவர் உயர்த்திப் பிடித்து ஆடும் விதம், நேரான, அசையாத தலை, ஷாட் ஆடும்போது மட்டை செல்லும் விதம் ஆகியவை பந்து மட்டையின் நடுப்பகுதியில் படுவதை தீர்மானித்தது.
அவர் தடுத்தாடும் போது கூட முழு மட்டையும் பந்தின் மீது இறங்கும். அரைகுறையாக மட்டையைக் கொண்டு செல்ல மாட்டார். அவர கால்கள் பந்து பிட்ச் ஆகும் திசைக்குச் சரியாக செல்லாவிட்டாலும் மட்டையைச் சரியாக பந்து பிட்ச் ஆகும் திசைக்கு எடுத்து சென்று ஆடுவார்.
சில பிட்ச்களில் 'பந்தைப் பார் அடி' என்ற உத்தி எடுபடாமல் போனது. ஆனால் ஒட்டுமொத்தமாகப் பார்க்கும்போது அவர் ஒரு சிறந்த டெஸ்ட் வீரர் என்பதில் ஐயமில்லை"
இவ்வாறு கூறியுள்ளார் திராவிட்.