Published : 01 May 2021 10:11 AM
Last Updated : 01 May 2021 10:11 AM

கரோனா தொற்றுக்கு இந்திய ஆணழகன் பலி: வறுமையில் வாடிய சோகம்

மும்பை

கரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட இந்திய ஆணழகன் ஜகதீஷ் லாட் பலியானார். கோவிட் தொற்றால் பாதிக்கப்பட்டு ஆக்சிஜன் துணையுடன் சிகிச்சைப் பெற்று வந்த அவர் நேற்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இந்தியாவில் கரோனா தொற்று இரண்டாவது அலை பரவல் எண்ணிக்கை உலக அளவை தாண்டி செல்கிறது. நாளொன்றுக்கு தொற்று பாதிப்பு உள்ளாகுவோர் எண்ணிக்கை 4 லட்சத்தை கடந்துள்ளது. இது இதுவரை இல்லாத உச்சமாகும். கரோனா தொற்று உயிரிழப்பும் உலக அளவில் மிக அதிகமாக உள்ளது. 3523 பேர் கடந்த 24 மணி நேரத்தில் உயிரிழந்துள்ளனர். கரோனா தொற்று யாரையும் விட்டு வைக்கவில்லை.

கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வந்த இந்திய ஆணழகன் ஜகதீஷ் லாட் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தது பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. மும்பை நவி பகுதியைச் சேர்ந்தவர் ஜகதீஷ் லாட்(34). இவருக்கு திருமணமாகி ஒரு மகள் உள்ளார்.

உடலை பேணுவதில் அதிக ஆர்வம் கொண்ட ஜகதீஷ் லாட் உள்ளூர் போட்டி மாநிலப்போட்டி என அகில இந்திய ஆணழகன் போட்டியில் தங்கப்பதக்கமும், உலக சாம்பியன்ஷிப்பில் வெள்ளிப் பதக்கத்தையும் வென்றவர். கிரிக்கெட் உள்ளிட்டவைகளுக்கு கொடுக்கும் ஊக்கம் மற்ற போட்டிகளுக்கு மதிப்பிருக்காது என்பது ஜகதீஷ் லாட் விவகாரத்திலும் நடந்துள்ளது.

உலக ஆணழகன் போட்டியில் வெள்ளிப்பதக்கம் வென்றவர் தனது வாழ்க்கையில் உரிய அரசுப்பணி கிடைக்காமல் வறுமையால் வாடி வீட்டு வாடகைக்கூட கொடுக்கமுடியாத நிலையில் தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ரயில்வேயில் வேலைக்கு முயற்சி செய்து வந்த ஜகதீஷ் லாட்டுக்கு மும்பை மாநகராட்சியில் பணி கிடைத்தும் வயது காரணமாக கிடைக்காமல் போனது.

ரயில்வேயில் வேலைக்கு முயற்சித்து வந்த அவர் கடந்த 5 ஆண்டுகளுக்கும் மேலாக பரோடாவில் உடற்பயிற்சி கூடம் ஒன்றை நிர்வாகிக்கும் பணியில் இருந்தார். கடந்த சில ஆண்டுகளாக லாக்டவுன் பிரச்சினை காரணமாக உடற்பயிற்சி செய்வதையும் விட்டுவிட்டார். வீட்டு வாடகை கொடுக்காததால் அவர் வீட்டை காலி செய்து வேறு ஊர் போகவும் உரிமையாளர் அனுமதிக்கவில்லை என்பதால் பரோடாவிலேயே தங்கும் நிலை ஏற்பட்டது.

இந்நிலையில் அவர் மனைவியும் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளார். கடந்த 4 நாட்களாக ஆக்சிஜன் உதவியுடன் தீவிர சிகிச்சையில் இருந்த அவர் நேற்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவரது உயிரிழப்பு குறித்து பாடிபில்டர் சங்கத்தினர் அதிர்ச்சி தெரிவித்துள்ளனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x