Last Updated : 01 May, 2021 03:13 AM

 

Published : 01 May 2021 03:13 AM
Last Updated : 01 May 2021 03:13 AM

விளையாட்டாய் சில கதைகள்: ‘அமெரிக்கா செல்லும் நாகாலாந்து மாணவி’

அமெரிக்காவில் உள்ள கல்லூரிகளில் விளையாட்டுக்கான ஸ்காலர்ஷிப் கோட்டாவில் இடம் கிடைப்பது அத்தனை எளிதான விஷயமில்லை. இந்த ஸ்காலர்ஷிப் இடங்களைப் பெற கடுமையான போட்டிகள் இருக்கும். இந்தச் சூழலில் நாகாலாந்தைச் சேர்ந்த லீனைன் ஜமீர், விளையாட்டுத் துறைக்கான ஸ்காலர்ஷிப் கோட்டாவில் அமெரிக்காவின் நியூ ஜெர்ஸி நகரில் உள்ள மான்மவுத் பல்கலைக்கழகத்தில் இடம் பிடித்துள்ளார். இதன்மூலம் இந்த கோட்டாவில் இடம்பிடித்த முதல் நாகாலாந்து வீராங்கனை என்ற பெருமையையும் பெற்றுள்ளார்.

நாகாலாந்து மாநிலத்தின் மோகோசுங் மாவட்டத்தைச் சேர்ந்த லீனைன் ஜமீர், டென்னிஸ் போட்டிக்கு முன்னதாக டேக்வாண்டோ மற்றும் நீச்சல் போட்டிகளில் கவனம் செலுத்தி வந்தார். தனது 6 வயது முதல் அவர் டென்னிஸ் விளையாட்டை கற்று வருகிறார். ஒரு கட்டத்தில் நாகாலாந்தில் பயிற்சி பெற நவீன வசதிகள் இல்லாததால், ஜமீர் பயிற்சி பெறுவதற்காகவே, அவரது குடும்பம் குவாஹாட்டி நகருக்கு குடிபெயர்ந்துள்ளது. அங்குள்ள ஆல் அசாம் டென்னிஸ் அசோசியேஷனில், இளவயது முதல் ஜமீர் பயிற்சி பெற்றுள்ளார்.

தேசிய அளவிலான இளையோர் டென்னிஸ் போட்டிகளில் 20-க்கும் மேற்பட்ட பட்டங்களை வென்றுள்ள ஜமீர், இதன்மூலம் அமெரிக்க பல்கலைக்கழகத்தின் கவனத்தை ஈர்த்துள்ளார்.

இதுபற்றி கருத்து தெரிவித்துள்ள ஜமீர், “வாழ்க்கையில் யாருக்கும் கிடைக்காத அரிய வாய்ப்பு எனக்கு கிடைத்துள்ளது. இதன்மூலம் என் வாழ்க்கையில் புதிய அத்தியாயத்தை தொடங்கவுள்ளேன். படிப்பையும், டென்னிஸையும் சம அளவில் கையாண்டு வாழ்க்கையில் உச்சத்தைத் தொட முயற்சி செய்வேன்” என்று கூறியுள்ளார்.

டென்னிஸ் உலகில் அவர் மேலும் பல உச்சங்களைத் தொட வாழ்த்துவோம்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x