

கரோனா வைரஸ் பாதிப்பால் போராடி வரும் இந்தியாவுக்கு ஆஸ்திரேலிய கிரிக்கெட் ஊடக அமைப்பின் சார்பில் 4,200 ஆஸ்திரேலிய டாலர் (ரூ.2.21 லட்சம்) நிதியுதவி வழங்கப்படுகிறது.
இந்தியாவில் கரோனா வைரஸ் 2-வது அலை தீவிரமாக இருக்கும் நிலையில் நாள்தோறும் லட்சக்கணக்கில் மக்கள் பாதிக்கப்படுகிறார்கள். ஆயிரக்கணக்கில் உயிரிழக்கிறார்கள். இந்தியர்கள் கரோனாவை எதிர்த்துப் போராடுவதைப் பார்த்து பல நாடுகள் ஆதரவுக்கரம் நீட்டுகின்றன. பல நாடுகள் ஆக்சிஜன் சிலிண்டர்களையும், மருந்துகளையும், முகக் கவசங்களையும் அனுப்பி உதவுகின்றன.
அந்த வகையில், ஐபிஎல் டி20 தொடரில் பங்கேற்று வரும் வீரர்களும், அணி நிர்வாகங்களும் இந்தியர்களுக்காக கரோனா நிதியுதவியை வழங்கி வருகின்றன. ஆஸ்திரேலிய வீரர் கம்மின்ஸ் ரூ.29 லட்சம் வழங்கி தொடங்கிவைத்த நிலையில் அதன்பின் நிகோலஸ் பூரன், ஆஸி.முன்னாள் வீரர் பிரெட் லீ, ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர், உனத்கத் என வரிசையாக உதவிக்கரம் நீட்டியுள்ளனர்.
இதில் சச்சின் டெண்டுல்கர் கரோனாவில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆக்சிஜன் செறிவாக்கிகளை வாங்குவதற்காகத் தொண்டு நிறுவனத்துக்கு ரூ.1 கோடி நிதியுதவி வழங்கியுள்ளார்.
இது தவிர டெல்லி கேபிடல்ஸ் அணி (ரூ.1.20 கோடி), ராஜஸ்தான் ராயல்ஸ் அணி (ரூ.7.5 கோடி), பஞ்சாப் கிங்ஸ் அணி (ஆக்சிஜன் செறிவாக்கிகள்) தங்களால் முடிந்த உதவியை வழங்குவதாக அறிவித்துள்ளன.
இந்நிலையில் ஆஸ்திரேலிய கிரிக்கெட் ஊடகக் கூட்டமைப்பு சார்பில் இந்தியர்களுக்கு கரோனா நிதியுதவி அறிவிக்கப்பட்டுள்ளது. பத்திரிகையாளர் ஜென் ஹார்னே ட்விட்டரில் பதிவிட்ட செய்தியில், “ஆஸ்திரேலிய கிரிக்கெட் ஊடகங்கள் எப்போதும் இந்தியர்கள், இந்தியா மீது அதிகமான அன்பும், நெருக்கமும் கொண்டவை.
ஆனால், இந்திய மக்கள் இந்த நேரத்தில் மிகப்பெரிய துன்பத்தைச் சந்தித்து வருகிறார்கள். இந்தியர்களுக்கு உதவும் பொருட்டு ஆஸ்திரேலிய கிரிக்கெட் ஊடகக் கூட்டமைப்பு சார்பில் சிறிய நன்கொடையாக 4,200 டாலர் (ரூ.2.21 லட்சம்) கிவ் அறக்கட்டளைக்கு வழங்குகிறோம். உங்களால் முடிந்தால், https://covid.giveindia.org என்ற முகவரியில் உதவி செய்யலாம்” எனத் தெரிவித்துள்ளனர்.