

பஞ்சாப் கிங்ஸ் அணியின் வேகப்பந்துவீச்சாளர் ஜெயதேவ் உனத்கத், தனது ஐபிஎல் ஊதியத்தின் 10 சதவீதத்தை கரோனா நிவாரணப் பணிகளுக்காக வழங்குவதாக இன்று அறிவித்துள்ளார்.
பஞ்சாப் கிங்ஸ் அணியின் வீரர் நிகோலஸ் பூரன் தனது ஊதியத்தின் ஒரு பகுதியை கரோனா நோயாளிகளின் மருத்துவப் பணிகளுக்கு நிவாரணமாக வழங்குவதாக அறிவித்துள்ள நிலையில் உனத்கத்தும் அறிவித்துள்ளார்.
இது தொடர்பாக ஜெயதேவ் உனத்கத் ட்விட்டரில் பதிவிட்ட வீடியோவில் கூறுகையில், “ கரோனாவில் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு மருத்துவப் பணிகளை மேற்கொள்ளவும், தேவைப்படுவோருக்கு உதவவும் என்னுடைய ஐபிஎல் ஊதியத்தில் 10 சதவீதத்தை அளிக்கிறேன். சரியான இடத்துக்கு உதவி சென்று சேர்வதை என் குடும்பத்தினர் உறுதி செய்வார்கள். ஜெய்ஹிந்த்.
நம்முடைய தேசம் கரோனா வைரஸ் பிரச்சினையால் பல வேதனைகளை அனுபவித்து வரும் சூழலில், எங்களை கிரிக்கெட் விளையாட அனுமதித்து சிறப்புச் சலுகைகளை வழங்கியதை நான் அறிவேன். உங்களது அன்புக்குரியவர்கள் கரோனா வைரஸால் உயிருக்குப் போராடி, அவர்களால் தனிப்பட்ட முறையில் ஏற்படும் இழப்பு எவ்வளவு வலியானது, கவலைக்குரியது என்ன என்பது தெரியும்.
இந்த நேரத்தில் கிரிக்கெட் விளையாடுவது சரியானது, தவறானது என்று நான் எதையும் சொல்லவில்லை. ஆனால், நேர்மையாகச் சொல்ல வேண்டுமானால், இந்த நேரத்தில் நாம் குடும்பத்தை விட்டு விலகி இருப்பது கடினமானது. நம்மால் எந்த அளவு முடியுமோ அந்த அளவு ஒருவொருக்கொருவர் உதவிக்கொள்ள வேண்டும். என்னால் முடிந்த பங்களிப்பைச் செய்துள்ளேன். தயவுசெய்து அனைவரும் தடுப்பூசி செலுத்திக் கொள்ளுங்கள். ஒவ்வொருவரும் பாதுகாப்பாக இருங்கள்” எனத் தெரிவித்துள்ளார்.
இதற்கிடையே பஞ்சாப் கிங்ஸ் அணியின் நிர்வாகம் சார்பில், ஆக்சிஜன் செறிவாக்கிகளை வழங்குவதாக உறுதியளித்துள்ளது. பஞ்சாப் கிங்ஸ் அணி நிர்வாகம் ட்விட்டரில் பதிவி்ட்ட கருத்தில், “கரோனா வைரஸுக்கு எதிராகப் போராடும் இந்தியாவுக்கு உதவ, ஆக்சிஜன் செறிவாக்கிகளை வழங்க பஞ்சாப் கிங்ஸ் உறுதியளிக்கிறது. ஒவ்வொருவரும் இந்த உதவியில் பங்கேற்க வேண்டுகிறோம். நம்மால் முடிந்ததைச் சேர்ந்து செய்வோம்” எனத் தெரிவித்துள்ளது.
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் வீரரும், ஆஸ்திரேலியாவைச் சேர்ந்தவருமான பாட் கம்மின்ஸ்தான் நிதியுதவியை வழங்கி பிள்ளையார் சுழி போட்டார். கம்மின்ஸ் ரூ.29 லட்சத்தை பிஎம் கேர்ஸ் நிதிக்கு கரோனா நிவாரணமாக வழங்கினார். அதைத் தொடர்ந்து பிரெட் லீ ஒரு பிட்காயினை வழங்குவதாக அறிவித்தார்.
ராஜஸ்தான் ராயல்ஸ் அணி நிர்வாகம் ரூ.7.5 கோடி நிவாரணமாக வழங்கப்படும் என நேற்று அறிவித்துள்ளது.டெல்லி கேபிடல்ஸ் அணி நிர்வாகம், ரூ.1.20 கோடியை மருந்துகள், அத்தியாவசிய மருந்துகள் வாங்க வழங்கவுள்ளது.