

ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் உள்ள ஜஹலனா டுங்கிரி பகுதியில் வசிப்பவர் தீபாலி சிங். 40 வயதான மாற்றுத்திறனாளியான இவர் குண்டு எறிதல் மற்றும் ஈட்டி எறிதலில் சிறந்த வீராங்கனையான வலம் வந்துள்ளார்.
மாநில அளவிலான போட்டிகளில் 100க்கும் மேற்பட்ட பதக்கங்கள், கோப்பைகளை வென்றுள்ளார். 11 வயதில் ஏற்பட்ட விபத்து ஒன்றில் தீபாலி சிங் தனது இடது காலை இழந்தார். அதன்பின்னர் செயற்கை கால் பொருத்திய நிலையில் வாழ்க்கையில் போராட கற்றுக்கொண்டார்.
2003ல் மாற்றுத்திறனாளி களுக்காக நடத்தப்பட்ட போட்டியில் முதன்முறையாக கலந்துகொண்ட தீபாலி சிங் குண்டு எறிதலில் வெற்றி பெற்றார். இதுதான் அவருக்குள் இருந்த விளையாட்டு ஆர்வத்தை வெளிக்கொண்டு வந்தது. அதன் பின்னர் ராஜஸ்தான் மாநிலம் சார்பில் பல்வேறு போட்டிகளில் பங்கேற்ற தீபாலி சிங் 100க்கும் மேற்பட்ட பதக்கங்கள், கோப்பைகளை வென்றார்.
ஆனால் இவற்றுடன் அவருக்கு பரிசுத்தொகையாக சில ஆயிரங்கள் மட்டுமே கிடைத்தது. இதற்கிடையே மைதானப்பகுதியில் டீ விற்கும் சிவ்பால்சிங் என்ற மாற்றுத்திறனாளியை தீபாலிசிங், காதலித்து திருமணம் செய்துகொண்டார். கணவரின் டீ வியாபாரத்தில் பெரிய அளவில் வருமானம் இல்லாத நிலையில், 40 வயதான தீபாலி சிங், தற்போது மால்வியா நகரில் பூ வியாபாரம் செய்து அதில் கிடைக்கும் குறைந்த வருமானத்தை கொண்டு அன்றாட பொழுதை கழித்து வருகிறார்.
இதுதொடர்பாக தீபாலி சிங் கூறும்போது, "யாரிடமும் நான் பிச்சை எடுக்க விரும்பவில்லை. அதனாலேயே இந்த வயதிலும் நான் தினமும் பயிற்சிகள் செய்கிறேன். மீண்டும் நான் ஒரு பதக்கத்துடன், பரிசுத்தொகையை வெல்வேன் என்ற நம்பிக்கை உள்ளது. நான் வென்ற பதக்கங்கள், கோப்பைகள் சிலவற்றை எனது உறவினர்களின் குழந்தைகளுக்கு நான் பரிசாக வழங்கியுள்ளேன். ஆனால் அவர்களுக்கு இது எந்த அளவுக்கு சந்தோஷத்தை கொடுக்கும் என்று தெரியவில்லை.
சமீபத்தில் பெங்களூருவில் நடைபெற்ற போட்டியில் முதலிடம் பெற்ற எனக்கு வெறும் ரூ.5 ஆயிரம் மட்டுமே பரிசுத்தொகை வழங்கப்பட்டது. வழக்கமாக மாற்றுத்திறனாளிகளுக்கான பரிசுத்தொகை ரூ.5 ஆயிரத்தில் இருந்து ரூ.10 ஆயிரத்துக்குள் தான் உள்ளது. ஆனால் வழக்கமான தடகள வீர்களுக்கு மாநில அரசு லட்சக்கணக்கில் பரிசுத்தொகை வழங்கி கவுரவிக்கின்றனர். எங்களுக்கு முக்கியத்துவம் கொடுப்பதில்லை" என்று தெரிவித்தார்.
தன்நம்பிக்கையுடன் உள்ள தீபாலி சிங், குண்டு எறிதல், ஈட்டி எறிதல் உள்ளிட்ட பல்வேறு வகையான போட்டிகளில் தான் சாதித்த அனுபவங்களை இளம் வீரர்களுக்கு எடுத்துக்கூறும் பணியையும் செய்து வருகிறார்.
தீபாலிசிங்கின் ஒரே கனவு அரசு வேலையில் சேருவது தான். பலமுறை விளையாட்டு ஒதுக்கீட்டின் கீழ் அரசு வேலைக்கு விண்ணப்பித்தபோதெல்லாம் தீபாலியின் விண்ணப்பம் கல்வியை காரணம் காட்டி நிராகரிக்கப்பட்டுள்ளது. இதையும் சரிசெய்யும் விதமாக அடுத்த ஆண்டுக்குள் 10ம் வகுப்பு தேர்வை எழுதி வெற்றி பெற்று அரசுப்பணியில் சேருவேன் என நம்பிக்கையுடன் தெரிவித்தார் தீபாலி சிங்.