

பஞ்சாப் கிங்ஸ் அணி வீரரும், மே.இ.தீவுகள் வீரருமான நிகோலஸ் பூரன், தனது ஐபிஎல் சம்பளத்தின் ஒரு பாதியை, இந்தியாவில் கரோனாவில் பாதிப்பின் நிவாரணப் பணிகளுக்காக வழங்குவதாக இன்று அறிவித்துள்ளார்.
இந்தியாவில் கரோனா வைரஸ் 2-வது அலை உச்சகட்டத்தில் இருந்து வருகிறது, நாள்தோறும் 3 லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் பாதிக்கப்பட்டு வருகிறார்கள், ஆயிரக்கணக்கில் உயிரிழந்து வருகின்றனர்.
ஏராளமான மக்கள் ஆக்சிஜன் பற்றாக்குறையும், தடுப்பூசி பற்றாக்குறையாலும் தவித்து வருகின்றனர்.
இதையடுத்து, கரோனா நோயாளிகளுக்கு உதவுவும், நிவாரணப் பணிகளுக்காகவும் ஐபிஎல் டி20 தொடரில் பங்கேற்றுள்ள வீரர்கள் நன்கொடை வழங்கி வருகின்றனர்.
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் வீரரும் ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த பாட் கம்மின்ஸ் ரூ.29 லட்சத்தை பிஎம் கேர்ஸ் நிதிக்கு கரோனா நிவாரணமாக வழங்கினார். அதைத் தொடர்ந்து பிரட் லீ ஒரு பிட்காயினை வழங்குவதாக அறிவித்தார்.
ராஜஸ்தான் ராயல்ஸ் அணி நிர்வாகம் ரூ.7.5 கோடி நிவரணமாக வழங்கப்படும் என நேற்று அறிவித்துள்ளது.டெல்லி கேபிடல்ஸ் அணி நிர்வாகம், ரூ.1.20 கோடியை மருந்துகள், அத்தியாவசிய மருந்துகள் வாங்க வழங்க உள்ளது.
இந்த சூழலில் மே.இ.தீவுகள் வீரரும், பஞ்சாப் கிங்ஸ் அணியில் இடம் பெற்றுள்ள நிகோலஸ் பூரன் தனது ஐபிஎல் ஊதியத்தின் ஒரு பகுதியை கரோனா நிவாரணமாக வழங்க உள்ளார்.
இது தொடர்பாக ட்விட்டரில் பூரன் பதிவிட்ட செய்தியில், “ கரோனா பெருந்தொற்றில் உலகில் பல நாடுகள் பாதிக்கப்பட்டிருந்தாலும், இந்தியா தற்போது மிகவும் மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது. வழிப்புணர்வை ஏற்படுத்தவும், இக்கட்டான நேரத்தில் நிதியுதவி வழங்கவும் என்னால் முடிந்த என் ஊதியத்தில் ஒருபகுதியை வழங்குகிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.
இதற்கிடையே பஞ்சாப் கிங்ஸ் அணி நிர்வாகம் சார்பில், ஆக்சிஜன் செறிவாக்கிகளை வழங்குவதாக உறுதியளித்துள்ளது. பஞ்சாப் கிங்ஸ் அணி நிர்வாகம் ட்விட்டரில் பதிவி்ட்ட கருத்தில் “கரோனா வைரஸுக்கு எதிராக போராடும் இந்தியாவுக்கு உதவ, ஆக்சிஜன் செறிவாக்கிகளை வழங்க பஞ்சாப் கிங்ஸ் உறுதியளிக்கிறது. ஒவ்வொருவரும் இந்த உதவியில் பங்கேற்க வேண்டுகிறோம், நம்மால் முடிந்ததை சேர்ந்து செய்வோம்” எனத் தெரிவித்துள்ளது.